--- --:--:-- --

த்ரிஷா குறித்த பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் விளக்கம்

10

டிகை த்ரிஷா குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிய கருத்து சமூகவலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் தான் இந்த கருத்தை கூறவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் மாநாட்டில் பேசிய த.வெ.க தலைவர் விஜய், அடுத்தவர் தொடங்கிய கட்சி மற்றும் முகவரியை வைத்துக்கொண்டு, அவர்களின் கொள்கைகளை மறந்துவிட்டார்கள். உங்களுக்கு திராணி இருந்தால் தனியாக கட்சி தொடங்கி ஒரு சதவீதம் ஓட்டு வாங்கி காட்டுங்கள் என்று சவால் விடும் தோணியில் பேசியிருந்தார். விஜயின் பேச்சு, தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பிய நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் பதில் கொடுத்தனர்.

 

அந்த வகையில், அன்றைய தினமே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், விஜய் முதலில் வெளியில் வர வேண்டும். த்ரிஷாவிடம் இருந்து அவர் வெளியில் வந்தால் தான் எல்லாமே நடக்கும். குடும்பத்தோடு நல்ல உறவு இருக்க வேண்டும். நல்ல தலைவர்கள் வழிநடத்திய இயக்கம் என்று வெளியில் சொல்ல வேண்டும். களத்தில் ஒரு கவுன்சிலர் கூட இல்லாதவர், 32 சதவீதம் வாக்குகள் இருப்பதாக சொல்கிறார்கள். இது எப்படி முடியும். நடிகர் என்பதால் இப்படி நடக்குமா? என பேசியிருந்தார்.

 

அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தனி நபர் விமர்சனம் செய்வது அரசியல் நாகரீகம் இல்லை என்று பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். குறிப்பாக தி.மு.க.வை சேர்ந்த பெண் தலைவர்கள் பலரும் நயினார் நாகேந்திரன் பேச்சு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், எங்கள் கட்சியின் 2-ம் கட்ட தலைவர்கள் கூட இப்படி பேசமாட்டார்கள். நாகரீகமாக பேசுவார்கள் என்று த.வெ.க தரப்பில் கூறப்பட்ட நிலையில், நெட்டிசன்களும் நயினாருக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர்.

 

இதனிடையே, த்ரிஷா குறித்த தனது பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாகடர் ராமதாஸ் கூறியிருந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்த நயினார் நாகேந்திரன், என்னை பொருத்தவரை தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்த கூடாது என்று நினைப்பவன் அவ்வளவு தான் என்று கூறியுள்ளார்.

Right Menu Icon