பெரியாருக்கும், கலைஞருக்கும் கிடைக்காத வாய்ப்பு நல்லகண்ணுவுக்கு கிடைத்திருக்கிறது – முதலமைச்சர்
சாதி வாதம், பெரும்பான்மை வாதத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் நல்லகண்ணுவின் வாழ்த்து பாடல் மற்றும் நூறு கவிஞர்கள், நூறு கவிதகள் என்ற நூலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாவில் டி.ராஜா, வைகோ, முத்தரசன், பழ.நெடுமாறன், மயில்சாமி அண்ணாதுரை, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர், நல்லகண்ணுவின் வாழ்க்கை தங்களுக்கு பெரும் ஊக்கமளிப்பதாகக் கூறினார். இயக்கம் வேறு தான் வேறு என்று நினைக்காமல் இயக்கத்திற்காக வாழ்ந்து கொண்டிருப்பவர் நல்லகண்ணு என்றும் எந்த அச்சுறுத்தலுக்கும் அவர் அஞ்சாமல் நெஞ்சுறத்துடன் உழைத்ததாகவும் பாராட்டு தெரிவித்தார்.
“பெரியாருக்கும், கலைஞருக்கும் கிடைக்காத வாய்ப்பு நல்லகண்ணுவுக்கு கிடைத்துள்ளது. நூறு வயதை கடந்தும் தமிழ் சமூகத்துக்கு தொண்டாற்ற தயாராக இருக்கிறார்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.





