--- --:--:-- --

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளரை கத்திமுனையில் கடத்திய மர்ம கும்பல்…! சிறிது நேரத்திலேயே விடுவித்ததால் பெரும் பரபரப்பு!!

dsgfd

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளரை கத்தி முனையில் மர்ம கும்பல் கடத்திச் சென்றது. கடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே அவரை அக்கும்பல் வேறொரு இடத்தில் விடுவித்த சம்பவம் உடுமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அன்சாரி வீதியில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் எம்எல்ஏ அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் அமைச்சரின் உதவியாளரான கர்ணன் இன்று காலை இருந்துள்ளார்.

 

காலை 11 மணியளவில் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்திமுனையில் கர்ணனை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்தனர். பின்னர் அலுவலகம் முன் நிறுத்தி வைத்திருந்த காரில் கடத்திச் சென்று எஸ்கேப் ஆனது அந்தக் கும்பல் . பட்டப் பகலில் நடந்த இந்த கடத்தல் சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

சிசிடிவியில் கேமராவில் பதிவான காட்சி….

 

இந்த கடத்தல் சம்பவம் குறித்த தகவல் அறிந்த திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. திஷா மிட்டல், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை துரிதப்படுத்தினார். மேலும், அமைச்சரின் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவைக் கொண்டும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து திருப்பூர், பொள்ளாச்சி பகுதிகளிலும் காவல் துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் திருப்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பானது.

இந்நிலையில் கடத்திச் செல்லப்பட்ட அமைச்சரின் உதவியாளர் கர்ணனை கடத்திய சிறிது நேரத்திலேயே அந்த மர்மக் கும்பல் உடுமலைக்கு சில கி.மீ. தொலைவில் தளி ரோட்டில்  அனாமத்தான இடத்தில் காரிலிருந்து இறக்கிவிட்டு விட்டுச் சென்றுவிட்டதாக தகவல் வெளியாதால் போலீசார் நிம்மதி அடைந்தனர். மீண்டும் அலுவலகத்துக்கு
திரும்பி வந்த கர்ணனிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கடத்தப்பட்டது ஏன்? கடத்தியது யார்? அல்லது கடத்தல் நாடகமா? என்பது மர்மமாக உள்ள நிலையில் கர்ணனிடம் போலீசார் துருவித் துருவி விசாரித்து வருகின்றனர். இந்த கடத்தல் சம்பவம் உடுமலையில் பெரும் பரபரப்பையே ஏற்படுத்திவிட்டது.

Leave a Reply

Right Menu Icon