சட்டசபைக்கு குட்கா கொண்டு சென்ற விவகாரம்: மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்கள் மனு மீது நாளை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!!
சட்டசபைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக, மு.க. ஸ்டாலின் உள்பட 18 திமுக எம்எல்ஏக்கள் மனு மீது நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தாராளமாக கிடைப்பதாக குற்றம்சாட்டி, திமுக எம்எல்ஏக்கள் அவற்றை சட்டசபைக்குள் கொண்டு சென்று காண்பித்தனர். திமுக எம்எல்ஏக்களின் இந்த செயல் சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் நடவடிக்கைக்கு சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
சபாநாயகரின் இந்த உத்தரவை எதிர்த்து திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சட்டசபைக்குள் குட்காவை காண்பித்தது தவறாகாது என்று திமுக தரப்புக்கு சாதகமான தீர்ப்பு அண்மையில் வழங்கப்பட்டது. ஆனால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டசபை உரிமை மீறல் குழு புதிதாக நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி மு.க.ஸ்டாலின் உள்பட 18 தி.மு.க. எம்எல்ஏக்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா இந்த வழக்கை விசாரித்த நிலையில், இந்த வழக்கில் நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்தார்.







