துறையூர் அருகே செங்காட்டுப்பட்டியில் கணித ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை
கரூர் மாவட்டம், குப்பிச்சிப்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் சரவணன் வயது 42 இவர் கரூரில் பரணிபார்க் வித்யாலயா பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் சரவணன் நேற்று பள்ளிக்கு செல்லாமல் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்று விடுப்பு கொடுத்துவிட்டு தனது மாமனார் ரமேஷ் ஊரான திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள செங்காட்டுப்பட்டி வந்துள்ளார். நேற்று மதியம் வந்தவர் மாலை வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த பொழுது சரவணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
இதைப்பற்றி துறையூர் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி (பொறுப்பு) அவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்பு அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் துறையூர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.
கரூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை தருவதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்த நிலையில், அதே பள்ளியில் சரவணன் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-துறையூர் செய்தியாளர் முருகேசன்






