இந்திய தேசம் பேராபத்தில் இருப்பதாகவும் அதற்கு 3 காரணி காரணம் : மன்மோகன் சிங் உருக்கம்
இந்தியா மிகப் பெரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார். முன்னாள் பிரதமரும், பொருளாதார வல்லுநரான மன்மோகன் சிங் தி ஹிந்து பத்திரிக்கையில் எழுதியுள்ள கட்டுரைகளில் மூன்று காரணிகளால் இந்தியா மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொண்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதாவது சமூக ஒற்றுமையின்மை, பொருளாதார மந்தநிலை மற்றும் உலக அளவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் போன்றவை தான் அந்த மூன்று காரணிகள் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த பிரச்சனைகள் இந்தியாவின் ஆத்மாவை சிதைப்பது மட்டுமல்லாமல் உலக அளவில் இந்தியாவின் நிலைப்பாட்டை குறைக்கக் கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி சொற்களால் அல்லாமல் செயல்களால் தேசத்தை சமாதானப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு உள்ள மன்மோகன்சிங் நாட்டில் தற்போது கடுமையான மற்றும் மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் வகுப்புவாத பதட்டங்கள் தூண்டப்பட்டு மதசார்பின்மை தீப்பிழம்பாக கொடுத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய அரசு நிறுவனங்கள் குடிமக்களை காப்பாற்றாமல் தர்மத்தை கைவிட்டு விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். நீதி மற்றும் ஊடக நிறுவனங்களும் தங்கள் கடமையில் இருந்து தவறி விட்டதாகவும் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் சமூக பதட்டங்களின் நெருப்பு நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதாகவும் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
பொருளாதார ஒற்றுமையின் அடிப்பகுதியான சமூக நல்லிணக்கம் இப்போது ஆபத்தில் உள்ளதாகவும் நாட்டில் தற்போதைய பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டுமெனில் முதலில் வைரஸ் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் அல்லது திருத்த வேண்டும் இதன் மூலம் சமூக சூழலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மூன்றாவதாக நுகர்வு தேவையை அதிகரிப்பதற்கும் பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்கும் ஒரு விரிவான நிதி திட்டத்தை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.





