தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரியில் படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள்! மக்கள் அச்சம்! அதிகாரிகளின் விளக்கம் என்ன?
கிருஷ்ணகிரியில் படையெடுத்து இருக்கும் வெட்டுக்கிளிகள் வட மாநிலங்களில் காணப்படும் லோகஸ்ட் இல்லை என்றும் மாறாக லோக்கல் வெட்டுக்கிளிகள் தான் என்று வேளாண் துறை இணை இயக்குனர் ராஜசேகர் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் உள்ள கிராமத்தில் நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகள் படை எடுத்தது விவசாயிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.
இதை அடுத்து நிகழ்விடத்திற்கு சென்ற வேளாண்மை துறை தோட்டக்கலை துறை இணை இயக்குனர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் துறை இணை இயக்குனர் ராஜசேகர் கோடைகாலங்களில் தென்படும் இந்தவகை வெட்டுக்கிளிகளால் விவசாய பயிர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்தார்.
எருக்கஞ்செடி போன்ற பால் சுரக்கும் செடிகளில் மட்டுமே இந்த மாதிரி வெட்டுக்கிளிகள் இருக்கும் என்றும் தண்ணீரில் வேப்ப எண்ணையை கலந்து தெளித்தால் இவற்றை கட்டுப்படுத்தி விடலாம் என்றும் தெரிவித்தார்.






