உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனு தாக்கல் நாளை ஆரம்பம்..! டெபாசிட், எவ்வளவு செலவு செய்யலாம் தெரியுமா?
ஊரகப்பகுதி உள்ளாட்சிப் பதவிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நிலையில், வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. எந்தெந்த பதவிக்கு எவ்வளவு தொகையை வேட்பு மனுவுடன் டெபாசிட் கட்டணமாக செலுத்த வேண்டும், தேர்தல் செலவு உச்சவரம்பு போன்ற விபரங்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது,
தமிழகத்தில் வரும் 27, 30 தேதிகளில், ஊரகப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு 2 கட்டமாக தேர்தலை அறிவித்துள்ளது மாநில தேர்தல் ஆணையம் . பல்வேறு குளறுபடிகளுக்கு இடையே, தமிழகத்தில் மாவட்ட பிரிவினைக்கு உள்ளான 9 மாவட்டங்கள் தவிர்த்து, 27 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் இன்னும் குழப்பம் இருப்பதாகக் கூறி, மீண்டும் நீதிமன்றத்தை நாடப் போவதாக திமுக அறிவித்துள்ளதால், தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என்ற சந்தேகம் இன்னும் நீடிக்கிறது.
இந்நிலையில் நாளை வேட்பு மனுத்தாக்கல் தொடங்க உள்ளது. நாளை தொடங்கி 16-ந் தேதி வரைவேட்பு மனு தாக்கல் செய்யலாம் .மனுக்கள் பரிசீலனை 17-ந் தேதியும், வாபஸ் பெற 19-ந் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 27, 30 தேதிகளில் தேர்தல் முடிந்தவுடன் ஜனவரி 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
நாளை வேட்பு மனுத்தாக்கல் தொடங்க உள்ள நிலையில், ஒவ்வொரு பதவிக்கும் எவ்வளவு கட்டணம் டெபாசிட் செய்ய வேண்டும். வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யலாம் போன்ற விபரங்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி பொதுப் பிரிவினருக்கு டெபாசிட் கட்டண விபரம் வருமாறு:
1. ஊராட்சி வார்டு உறுப்பினர் : ரூ.200
2. ஊராட்சி தலைவர் : ரூ.600
3. ஒன்றிய கவுன்சிலர் : ரூ.600
4. மாவட்ட கவுன்சிலர் : ரூ.1000
வேட்பு மனுவின் போது செலுத்தும் இந்த டெபாசிட் தொகையை திரும்பப் பெற, போட்டியிட்ட வேட்பாளர்கள், மொத்தம் பதிவான செல்லத்தக்க வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு பெற்றாக வேண்டும். இல்லையேல் டெபாசிட்டை இழக்க நேரிடும்.
எவ்வளவு செலவு செய்யலாம்?
தேர்தலில் ஒவ்வொரு பதவிக்கும் எவ்வளவு தொகையை அதிகபட்சமாக செலவு செய்யலாம் என்பதற்கும் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
ஊராட்சி உறுப்பினராக போட்டியிடுபவர் ரூ 9 ஆயிரமும், ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர் ரூ 34 ஆயிரம், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ரூ 85 ஆயிரம், மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் ரூ 1 லட்சத்து 70 ஆயிரம் வரையும் செலவழிக்கலாம்.
தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள் செலவு கணக்கை உரிய தேர்தல் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு, தேர்தல் ஆணையத்தால் தடை நடவடிக்கைக்கு ஆளாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்கள் ஒவ்வொருவரும் 4 வாக்குகள் பதிவு செய்ய வேண்டும். இதற்கு வாக்கு சீட்டுகள், ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு வெள்ளை நிறத்திலும், ஊராட்சி தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பச்சை, மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு மஞ்சள் நிறம் என 4 வண்ணங்களில் அச்சடிக்கப்படும். இந்த வாக்குச் சீட்டுகளில் தங்களுக்கு விருப்பப் பட்ட வேட்பாளருக்கு உரிய சின்னத்தில் முத்திரையிட்டவுடன் 4 வாக்குச் சீட்டுகளையும் தனித்தனியாக மடித்து ஒரே பெட்டியில் போட வேண்டும்.
இந்தத் தேர்தலில், ஊராட்சி உறுப்பினர், ஊராட்சித் தலைவர் பதவிக்கு கட்சி சார்பற்ற முறையில் தேர்ந்தெடுக்கப்படுவதால் போட்டியிடுபவர்களுக்கு சுயேட்சை சின்னம் ஒதுக்கப்படும். ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு கட்சி ரீதியிலும் போட்டியிடலாம் என்பதால் அங்கீகாரம் பெற்ற மற்றும் பதிவு பெற்ற அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிடலாம்.





