வீடுகளை காலி செய்ய சொன்னால் சட்டரீதியான நடவடிக்கை!
கொரொனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் சுகாதாரப் பணியாளர்களை வீடுகளை காலி செய்யுமாறு வற்புறுத்தினால் உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளருக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரொனா பரவலுக்கு எதிராக போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களை அவர்கள் தங்கியிருக்கும் வீடுகளின் உரிமையாளர்கள் காலி செய்ய வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.
இதுபோன்ற செயல்கள் பொது சேவையில் ஈடுபடுவோரை பணி செய்ய விடாமல் தடுக்கும் வகையில் ஆனது என்றும் அவ்வாறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் புகார் வரும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.







