--- --:--:-- --

காங்கேயம், அவிநாசியில் பல லட்சம் ஸ்வாகா… சிக்கியது கில்லாடி கும்பல்…பரபர பின்னணி!

1

திருப்பூர் மாவட்டம் அவினாசி மற்றும் காங்கேயத்தில் கடன் வாங்கித் தருவதாகக்கூறி பொதுமக்களிடம் பல லட்சம் ரூபாய் கபளீகரம் செய்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏமாற்றிய தொகையை வசூலித்துத் தர வேண்டுமென்று பெண்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

 

நிதி நிறுவனங்களை நடத்தி அப்பாவி பொதுமக்களின் பணத்தை மோசடி செய்வது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதுபற்றி போலீசார் எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அதிக வட்டி ஆசை அல்லது நம்ப முடியாத சலுகைகளைக் காட்டினால், மக்கள் அதை நம்பி முதலீடு செய்து ஏமாந்துவிடுகிறார்கள்.

 

காங்கேயம், அவினாசியில் பண மோசடி

 

அதேபோல், பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பலரும், எளிதில் கடன் கிடைக்கிறது என்று யாராவது சொன்னால், அந்த நிறுவனத்தின் பின்னணி, வரலாறு போன்றவற்றை அறிந்து கொள்ளாமல், பல ஆவணங்கள் மற்றும் வைப்புத் தொகை செலுத்தி, இறுதியில் மோசடிக்கு ஆளாகிறார்கள்.

அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் அரங்கேறிய நிதி மோசடியானது, காங்கேயம் மற்றும் அவினாசி பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. காங்கேயம் மற்றும் அவினாசி பகுதியில், NKI பைனான்சியல் சர்வீசஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த நிதி நிறுவனம் தரப்பில், பொதுமக்களிடம் இருந்து சிறுதொழில் துவங்க தனிநபர் கடன் மற்றும் மகளிர் குழுக்களுக்கு கடன் தருவதாக விளம்பரம் செய்யப்பட்டது. இதை நம்பி காங்கேயம் மற்றும் அவினாசி பகுதியை சார்ந்த பொதுமக்கள் பலர் பணம் கட்டியுள்ளனர்.

 

ஆனால், சொன்னபடி அந்த நிறுவனம் தரப்பில் பொதுமக்களுக்கு கடன் வாங்கித் தரப்படவில்லை. விசாரித்தபோதுதான் தெரியவந்தது அந்த நிறுவனத்தின் மோசடி. அந்த நிறுவனத்தை சேர்ந்த நபர்கள், பொதுமக்களிடம் இருந்து வசூல் செய்த பணத்துடன் தலைமறைவாகி விட்டார்கள் என்பது தெரிய வந்தது. அதாவது அவினாசி மற்றும் காங்கேயம் பகுதிகளில் இருந்து சுமார் 1000 பேரிடம் ரூ. 43 லட்சத்தை வசூல் செய்துவிட்டு அந்த கும்பல் தலைமறைவாகி இருக்கிறது.

 

டாக்குமெண்ட் சார்ஜ் கொடுங்க!

இதுதொடர்பான புகாரின் பேரில் திருப்பூர் மாவட்டம் குற்றப்பிரிவு போலீசார், கடந்த 11ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். நிதி நிறுவனத்தை நடத்தி வந்த மேலாண்மை இயக்குனர் நிர்மல்குமார், பொதுமேலாளர் தேவிகா மற்றும் சேல்ஸ் ஹெட் கோபி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.

இது குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், “NKB பைனான்ஸ் சர்வீஸஸ் காங்கேயம் கிளையில் மகளிர் குழு ஒன்றுக்கு 10 பேர் வீதம் 55 குழுக்கள் மூலம் 550 பெண்களிடம் தலா ரூ.1,341 என, மொத்தம் ரூ.7,37,550 பணம் பெற்றுள்ளனர். தனிநபர் கடனுக்காக 261 நபர்கள் தலா 1,000 ரூபாய் விதம், LOGIN CHARGE எனக் கூறி மொத்தம் ரூ.2,81,000 பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், சுமார் 86 நபர்களுக்கு தனிநபர் கடனுக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டதாக பொய்த்தகவலைக் கூறி, அதற்கு இன்சூரன்ஸ் மற்றும் டாக்குமெண்ட் சார்ஜ் என்று கூறி, ரூ. 10 லட்சம் வரை பொதுமக்களிடம் நிதி நிறுவனம் நடத்தியவர்கள் வசூல் செய்துள்ளனர்.

 

இதேபோல், அவினாசியில் செயல்பட்டு வந்த NKE NKB பைனான்ஸ் சர்வீசஸ் கிளையில் மகளிர் குழு ஒன்றுக்கு 10 பேர் வீதம் 52 குழுக்கள் மூலம் 520 பெண்களிடம் தலா ரூ 1341 என மொத்தம் ரூ.6,97,320 பணம் செலுத்தியுள்ளனர். தனிநபர் கடனுக்காக 355 நபர்கள் தலா 1000 ரூபாய் விதம் LOGIN CHARGE எனக் கூறி 3,55,000 ரூபாய் பணம் வசூலித்துள்ளனர். அவர்களில் சுமார் 140 நபர்களுக்கு தனிநபர் கடனுக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டதாகக்கூறி, இன்சூரன்ஸ் மற்றும் டாக்குமெண்ட் சார்ஜ் எனக்கூறி ரூ. 13 லட்சம் தொகையை பொதுமக்களிடம் வசூல் செய்துள்ளனர். அந்த வகையியில் காங்கேயம் மற்றும் அவினாசியில் மொத்தம் ரூ. 43 லட்சம் தொகையை நிதி நிறுவனத்தினர் வசூல் செய்துவிட்டு, நிதி நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டு தலைமறைவாகி விட்டனர்.

 

ஆட்டையாம்பாளையத்தில் சிக்கிய அக்கா- தம்பி!

இது தொடர்பாக பொதுமக்களின் புகாரின் பேரில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தப்பி தலைமறைவான நிதி நிறுவனத்தினரை தேடி வந்த நிலையில், அக்டோபர் 14ம் தேதி நிறுவனத்தை சேர்ந்த, திருச்சி நவல்பட்டில் வசிக்கும் கோபி(எ) வேதகிரி (எ) வினோத் (எ) கோபால், (வயது 40); திருச்சி கே. கே. நகரைச் சேர்ந்த 42 வயதான தேவிகா; திருச்சி பீமா நகரைச் சேர்ந்த ஜான் கென்னடி (எ) ஆண்டனி (வயது 34) ஆகியோர், அவினாசி ஆட்டையாம்பாளையத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூ. 11 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

இதில் கோபி என்பவர் மீது கள்ளக்குறிஞ்சி, ஈரோடு, தென்காசி, திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களில் ஆறு மோசடி குற்ற வழக்குகள் உள்ளன. தேவிகா மீது திருவள்ளூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இரண்டு மோசடி குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கோபியும் தேவிகாவும் உடன்பிறந்த அக்கா தம்பி ஆவார்கள். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றவர்களை விரைவில் கண்டுபிடிக்கவும் இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட நபர்களின் சொத்துக்களை முடக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

எச்சரிக்கும் போலீசார்..!

 

திருப்பூர் மாவட்டத்தில் ஆங்காங்கே நிதி மோசடிகள் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து போலீசார் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், “எளிதாக எந்த வித ஆவணங்களும் இன்றி கடன் தருவதாகவும் அல்லது குறைவான வட்டியில் கடன் தருவதாகவும் அல்லது முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாகவும் பொய்யான விளம்பரத்தை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.

 

மேலும், வேலை வாங்கி தருவதாகவும் பணம் டெபாசிட் செய்தால் இரட்டிப்பு செய்து தருவதாகவும் அதிக வட்டி தருவதாகவும் ஏமாற்றுகிறார்கள். அரசால் அங்கீகரிக்கப்படாத பைனான்ஸ் நிறுவனங்களின் விளம்பரங்களை பார்த்து முதலீடு செய்ய வேண்டாம்.

ஆன்லைனில் தங்களது வங்கியின் மூலமாசு பேசுவதாக கூறி, உங்களது வங்கி கணக்கை UPDATE செய்ய வேண்டும் என்றும் NOMINEE பதிவு செய்ய வேண்டும் என்றும் OTP நம்பரை பகிருமாறு கூறி OTP சொன்ன உடன் உங்களது வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் எடுத்துவிடுவார்கள்” என்று காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

 

Right Menu Icon