ஆகஸ்ட் 14-ல் சசிகலா விடுதலையா? தேதி குறிப்பிட்டு பாஜக பிரமுகர் போட்ட “டுவீட்”…சிறைத்துறையின் சேதி யோ வேறு மாதிரி?
பெங்களூரு சிறையிலிருந்து “சின்னம்மா” சசிகலா தண்டனைக் காலம் முடிவதற்கு முன்னதாகவே வரும் ஆகஸ்ட் 14-ந் தேதி விடுதலையாகிறார் என பாஜக பிரமுகர் ஆசிர்வாதம் ஆச்சாரி போட்ட “டுவிட்” பதிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் திடீரென பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் பெங்களூரு சிறை நிர்வாகமோ இத் தகவலை அடியோடு மறுத்துள்ளதுடன் முன் கூட்டியே விடுதலை செய்யப்பட வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது சசிகலா ஆதரவாளர்களுக்கு ஏமாற்றத்தையும், ஆளும் அதிமுகவுக்கு தற்காலிக நிம்மதியையும் கொடுத்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளனர். இவர்களின் தண்டனைக் காலம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் தான் முடிவடைய உள்ளது. ஆனால் சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆக வாய்ப்புள்ளதாக பேச்சுக்கள் எழுந்து வருகிறது.
நன்னடத்தை விதிகள் படி 6 மாதம் முன் கூட்டியே விடுதலை செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் தான் பாஜகவில் தேசிய அளவில் முக்கியப் பிரமுகராகவும், ஊடக விவாதங்களில் பாஜகவின் ஊதுகுழலாக செயல்படுபவருமான ஆசீர்வாதம் ஆச்சார்யா, நேற்றிரவு டுவிட்டரில் போட்ட ஒரு பதிவு தமிழக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல் நாளில் (ஆகஸ்ட் 14) சசிகலா விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளது. கூடுதல் தகவல்களுக்கு காத்திருங்கள் என ஆச்சார்யா பதிவிட்டு சஸ்பென்ஸ் வைத்திருந்தார். பாஜக புள்ளியின் இந்தப் பதிவில் உண்மை இருக்கும் என்று நம்பிய சசிகலாவின் ஆதரவாளர்கள் உற்சாக மிகுதியில் துள்ளிக் குதித்தனர்.

அதே வேளையில் ஆச்சார்யாவின் இந்தப் பதிவு ஆளும் அதிமுக வட்டாரத்துக்கு வயிற்றில் புளியை கரைத்தது போலாகிவிட்டது என்றே கூறலாம். ஏனெனில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சசிகலா முன் கூட்டியே விடுதலையானால் அதிமுகவில் கலகம் வெடிக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். சசிகலா வெளியில் வந்தவுடன், இப்போது அமைச்சர்களாக உள்ள பலரும் சசிகலா பக்கம் பல்டி அடிப்பது நிச்சயம் என்பது தெரிந்த சங்கதி தான்.
இதனால் எடப்பாடி தலைமையிலான ஆட்சிக்கும் சிக்கல் எழுவதுடன், சசிகலா வசம் அதிமுக மீண்டும் கைமாறும் சூழல் உருவாகும் வாய்ப்புகளும் உள்ளது என்றே பலரும் கூறி வருகின்றனர். இதனால் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த தங்கமணி, வேலுமணி போன்ற அதிமுக முக்கியப் புள்ளிகள், சசிகலா முன்கூட்டியே விடுதலையாவதை ரசிக்கவில்லை என்றே கூறலாம்.
இந்நிலையில், ஆகஸ்ட் 14-ல் சசிகலா விடுதலையாக வாய்ப்பு என்ற ஆச்சார்யாவின் டுவிட்டர் பதிவுக்கு பெங்களூரு சிறை நிர்வாகம் தரப்பு மறுப்பு தெரிவிப்பது போல் விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா உள்ளிட்டோருக்கு நன்னடத்தை விதிகள் கீழ் முன் கூட்டி விடுதலை என்பது பொருந்தாது.
அதனால் முழு தண்டனைக் காலம் முடிந்த பின்பே விடுதலை செய்யப்பட வாய்ப்பு என சிறை நிர்வாகம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், சசிகலா முன் கூட்டி விடுதலை செய்யும் வாய்ப்பு உண்டா? என்ற கேள்விக்கும் இதே போன்ற பதில் தான் கூறப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதனால் சசிகலா ஆகஸ்ட் 14-ல் விடுதலை ஆக வாய்ப்பு என ஆச்சார்யா போட்ட டுவீட் புஸ் தானா? அல்லது அதில் ஏதேனும் உண்மை இருக்குமா? என்பதும் அடுத்து வரும் சில நாட்களில் தெரிந்துவிடும் என்றாலும் இப்போதைக்கு சிறைத்துறையின் விளக்கத்தால் சசிகலா ஆதரவாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளதும், ஆளும் அதிமுக புள்ளிகள் தற்காலிக நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர் என்பதே நிதர்சனமான உண்மை.






