--- --:--:-- --

கலைத்திருவிழா 2024-25 போட்டி முடிவுகள் : 4 போட்டிகளில் மாநில அளவில் திருப்பூர் மாவட்ட பள்ளிகள் முதலிடம் 

11

மிழக அரசு தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் “சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு ” என்ற தலைப்பில் மாநில அளவிலான கலைத்திருவிழா 2024-25 போட்டிகள் கடந்த சில வாரங்களாக  பள்ளி, வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் தமிழகம் முழுவதும் நடந்தது. மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

 

இதனை தொடர்ந்து மாநில அளவிலான கலைத் திருவிழாவின் இறுதிப்போட்டிகள் 1 முதல் 5 ம் வகுப்பு மாணவர்களுக்கு கோவை கே.பி.ஆர் கல்லூரியிலும், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு காங்கேயம் நத்தக்காடையூர் காங்கேயம் இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ், பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியிலும், 9, 10 மாணவர்களுக்கு ஈரோட்டிலும், 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு நாமக்கல்லிலும்  நடந்தது.

 

தமிழகத்தில் இருந்து 38 மாவட்டங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு  தங்களது, மற்றும் தங்கள் குழுவினரின் தனித்திறமையை வெளிகாட்டினர். கலைத்திருவிழாவில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் உடன் வந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் 3 ந் தேதி இரவு முதல் தங்கும் வசதி, உணவு வசதி உள்பட அனைத்து வசதிகளும் பள்ளி கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

 

இதனைத்தொடர்ந்து இன்று மதியம் 11 மணி அளவில் அனைத்து போட்டிகளுக்கான முடிவுகளை தமிழக அரசு பள்ளி கல்வித்துறை  அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன் முடிவுகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பியது. இதன் அடிப்படையில் பல்வேறு போட்டிகளில் திருப்பூர் மாவட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்த பள்ளி மற்றும் மாணவர்கள் விபரங்கள் வருமாறு,

 

மாநில அளவில் முதல் இடம் :

திருப்பூர் பி.என்.ரோடு பாண்டியன் நகர் அரசு தொடக்கப் பள்ளியை சேர்ந்த 5 ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவர் தனுஷ்குமார் தனிநபர்  களிமண் பொம்மைகள் செய்யும் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். திருப்பூர், சிறுபூலுவபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 7 ஆம்  வகுப்பு மாணவிகள் மோனிகா, நேத்ரா, பாவன்யா, அணிலேகாஸ்ரீ, 8 ஆம் வகுப்பு மாணவிகள் தனிஷ்காஸ்ரீ, சுவேதா, தன்யாஸ்ரீ, நந்திதா, அக்ஷயா ஆகிய கொண்ட மாணவி குழுவினர் மயில் தோகை என்னும் பெயரில் கிராமிய நடன குழு போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.

 

அதேபோல் உடுமலைப்பேட்டை அரசு உதவி பெறும் எஸ்.வி.ஜி மேல்நிலைப்பள்ளியின் 12 ஆம் வகுப்பு மாணவி மஹதி புல்லாங்குழல் (தனி )  வாசிக்கும் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார். அதேபோல் திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரி நகரவை மேல்நிலைப்பள்ளி பள்ளியில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவிகள் தனலட்சுமி, இந்துமதி, துர்கா தேவி, அர்ச்சனா, தீபிகா, தாரணி ஆகியோர் கொண்ட வான்முகில் என்ற பெயரில்  ஃப்ரீ ஸ்டைல் எனப்படும் பிற வகை நடன குழு போட்டியில்  மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மாநில அளவில்  இரண்டாம் இடம் :

 

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகில் உள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 6 ஆம் வகுப்பு மாணவி தனலட்சுமி ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல் போட்டியில் 2 ஆம் இடமும், அவிநாசி, சேவூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவர் நவீன் வயலின் வாசிக்கும் போட்டியில் 2 ஆம் இடமும், தாராபுரம், குண்டடம் அருகே உள்ள தாயம்பாளையம் அரசு உதவி பெறும் வி.எம்.சி.டி.வி மேல்நிலைப்பள்ளி 11ஆம் வகுப்பு மாணவர்கள் லோகேஸ்வரன், கார்த்திகேயன், தீபக், தமிழரசு, கதிர்வேல் மற்றும் மாணவிகள் பவித்ரா, தன்யா, கற்பகம் ஆகியோர் வைகை என்ற பெயரில்  (தோற்பாவை, மரப்பாவை, நிழற்பாவை ) பொம்மலாட்டம் குழு போட்டியில் இரண்டாம் இடமும் பெற்றுள்ளனர்.

மாநில அளவில் மூன்றாம் இடம் :

 

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள குண்டடம், கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 6 ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவி தனலட்சுமி களிமண் சுதை வேலைப்பாடு போட்டியில் மூன்றாம் இடமும், திருப்பூர் வடக்கு, அனுப்பர்பாளையம் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சேர்ந்த 2 ஆம் வகுப்பு மாணவி லனிஹா சைனி மழலையர் பாடல் (தமிழ்) ஒப்பிவித்தல் போட்டியில் 3 ஆம் இடமும், உடுமலைப்பேட்டை அரசு உதவி பெறும் புங்கமுத்தூர் ஜி.கே.என் மேல்நிலைப்பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவர் அருண் பிரசாந்த்  பம்பை, உருமி, உடுக்கை அடித்தல் போட்டியில் 3 ஆம் இடமும், உடுமலைப்பேட்டை பகுதி அரசு உதவி பெறும் எஸ்.கே.பி மேல்நிலைப்பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவி ஆராதனா செவ்வியல் இசை (தனி) பாடல் போட்டியில் 3 ஆம் இடமும், தாராபுரம் அருகே உள்ள குண்டடம், தாயம்பாளையம் அரசு உதவி பெறும் வி எம் சி டி வி மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கிஷோர் குமார், அருள் குகன், மாதவன், பத்மேஷ், கவின்குமார் மற்றும் மாணவிகள்  வர்ஷினி, இளவரசி, கவிபிரியா ஆகியோர் கொண்ட குறிஞ்சி குழுவினர் (தோற்பாவை, மறப்பாவை, நிலைப்பாடு என்னும்) பொம்மலாட்டம்  குழு போட்டியில் 3 ஆம் இடமும், தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவர் தபஸ்ரீதரன் மிருதங்கம், தபேலா, தவில், கடம் வாசிக்கும் போட்டியில் 3 ஆம் இடம் பெற்று மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர்.

 

பல்வேறு போட்டிகளில் மாநில அளவில் வெற்றி  பெற்ற மாணவர்களுக்கு திருப்பூர் வடக்கு வட்டார கல்வி அலுவலர் சின்னக்கண்ணு, திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரி நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை ஸ்டெல்லா அமலோற்பவ மேரி, சிறுபூலுவபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியை சாந்தகுமாரி, ஆசிரியைகள் அங்கயற்கண்ணி, விண்ணரசி,அனுராதா, ஜோதிலட்சுமி, கங்கரீஸ்வரி, ரம்யா, முருகேஸ்வரி, சுப்புலட்சுமி, கருணாம்பிகை,புனிதா, ஜெய்வாபாய்பள்ளி எஸ்.எம்.சி உறுப்பினர் முத்தமிழ் செல்வன்,பயிற்சியாளர்கள்  விஜய், கிருத்திகா தேவி மற்றும் அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். மாநில அளவில் பரிசு பெற்ற திருப்பூர் மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலானோர் பனியன் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், மற்றும் கூலி தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கலை திருவிழாவில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட  மாணவர்களுக்கு கலையரசன் பட்டமும், மாணவிகளுக்கு  கலையரசி பட்டமும் ஒவ்வொரு பிரிவிலும் வழங்கப்பட உள்ளது.

 

சென்னையில் நடக்க உள்ள பிரமாண்டமான விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி  மற்றும் அமைச்சர்கள், கல்வித்துறை உயர் அதிகாரிகள் வழங்க உள்ளனர். விழா குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என மாநில கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon