ஜூன் 3ஆம் தேதி செம்மொழி நாளாகக் கொண்டாட்டம்..!
திமுக பொதுக்குழு கூட்டம் ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம், மதுரை மாவட்டம், உத்தங்குடியில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது.
இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் பங்கேற்றுள்ளனர். சுமார் 3 ஆயிரத்து 400 பொதுக்குழு உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.
அத்துடன் 23 அணியின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் 4 ஆயிரம் பேர் என மொத்தமாக 7 ஆயிரத்து 500 பேர் பொதுக்குழுவில் கலந்துகொண்டுள்ளனர். சென்னை அண்ணா அறிவாலயம் போன்ற முகப்புத் தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ள அரங்கின் நுழைவு வாயில் முன்பு 100 அடி உயரக் கொடிக்கம்பத்தில் திமுக கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்துப் பொதுக்குழுவைத் தொடங்கி வைத்தார்.
இந்தப் பொதுக்குழு கூட்டத்தில், திமுக பொதுக்குழுவில் புதிதாக இரண்டு அணிகளை உருவாக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திமுகவில், கல்வியாளர் அணி மற்றும் மாற்றுத்திறனாளிகள் அணி எனப் புதிதாக இரண்டு அணிகள் உருவாக இருக்கிறது. இதன்மூலம் திமுகவில் உள்ள சார்பு அணிகளின் எண்ணிக்கை 23-லிருந்து 25 ஆக உயர்ந்துள்ளது.
மதுரை பொதுக்குழுவில் மத்திய அரசைக் கண்டித்தும், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 30 சதவீத வாக்காளர்களை உறுப்பினர்களாகச் சேர்க்க இலக்கு நிர்ணயித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதேபோல், திமுக பொதுக்குழுவில் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இரங்கல் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதேபோன்று காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் மறைவுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாளைச் செம்மொழி நாளாகக் கொண்டாட திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏழை, எளிய மக்களை வதைக்கும் நகைக் கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும், மீனவர்கள் நலன் காக்கக் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வக்பு சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெறக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மத்திய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதைக் கண்டித்தும், தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நிதியைத் தர மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதேப்போன்று சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாகவும் முறையாகவும் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 27 தீர்மானங்கள் திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன. திமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் போது தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.






