கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறப்பு..!
கோடை விடுமுறைக்குப் பிறகு மாணவர்களை வரவேற்க பள்ளி வகுப்பறைகள் தயாராகி வருகின்றன.தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், பள்ளிகளில் தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சேலம், தூத்துக்குடி, கோவை மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விறுவிறுப்புடன் தூய்மைப் பணிகள் நடைபெற்றன.வகுப்பறைகள், கழிவறைகள், குழந்தைகள் விளையாடும் இடங்கள் என அனைத்தும் தூய்மைப்படுத்தப்படுகின்றன.
பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியிருந்தால் அவையும் அகற்றப்பட்டு வருகின்றன.பள்ளி திறப்பு அன்றே மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் இலவச சீருடைகள் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளதால், அந்தந்த பள்ளிகளிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.






