--- --:--:-- --

திமுக ஆட்சிக்கு எதிர் அலையைவிட ஆதரவான அலையே அதிகம் வீசுகிறது – முதலமைச்சர்

6

திமுக பொதுக்குழு கூட்டம், மதுரை மாவட்டம், உத்தங்குடியில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் பங்கேற்றுள்ளனர். சுமார் 3,400 பொதுக்குழு உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.

 

அத்துடன் 23 அணியின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் 4 ஆயிரம் பேர் என மொத்தமாக 7,500 பேர் பொதுக்குழுவில் கலந்துகொண்டுள்ளனர்.
சென்னை அண்ணா அறிவாலயம் போன்ற முகப்புத் தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ள அரங்கின் நுழைவு வாயில் முன்பு 100 அடி உயரக் கொடிக்கம்பத்தில் திமுக கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்துப் பொதுக்குழுவைத் தொடங்கி வைத்தார்.

 

இந்தப் பொதுக்குழு கூட்டத்தில், புதிதாக இரண்டு அணிகளை உருவாக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திமுகவில், கல்வியாளர் அணி மற்றும் மாற்றுத்திறனாளிகள் அணி எனப் புதிதாக இரண்டு அணிகளை உருவாக இருக்கிறது. இதன்மூலம் திமுகவில் உள்ள சார்பு அணிகளின் எண்ணிக்கை 23-லிருந்து 25 ஆக உயர்ந்துள்ளது.

 

தொடர்ந்து திமுக பொதுக்குழுவில் மொத்தம் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்தப் பொதுக்குழுவில் பேசிய திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “என்னைப் பொறுத்தவரைக்கும், பணிவுதான் தலைமைப் பண்பின் அடையாளம். சொல்லைவிடச் செயலே பெரிது. வரலாறு காணாத வெற்றியை நாம் பதிவு செய்வோம் என்று சொல்வது, உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையில்தான்.

 

நான் தலைவராகப் பொறுப்பேற்றதில் இருந்து, நாம் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கான காரணங்களில் ஒன்று, நம்முடைய கூட்டணி. அவர்களோடு நான் எப்படி நட்போடும், பாச உணர்வோடும் பழகுகிறேனோ, நீங்களும் அதே உணர்வோடு கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து செயலாற்ற வேண்டும்.இளைஞர்களுக்கு வாய்ப்பைக் கொடுங்கள். எந்தளவுக்கு இளைஞர்களுக்கு இடம் கொடுக்கிறீர்களோ, அந்தளவுக்குக் கழகத்தில் புது ரத்தம் பாயும். செயல்பாடுகள் வேகமாக இருக்கும். வெற்றி உறுதி செய்யப்படும்.

 

அதிமுக, ஒட்டுமொத்தமாக பாஜகவின் கண்ட்ரோலுக்குச் சென்றிருக்கிறது. அடுத்து, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பாஜகவின் கண்ட்ரோலுக்குக் கொண்டு செல்லத்தான் எடப்பாடி பழனிசாமி துடிக்கிறார். எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது. டெல்லிக்கு தமிழ்நாடு எப்பவுமே Out of control தான். டெல்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது.

 

எந்தக் கோமாளி கூட்டத்தாலும் நம்மை வெல்ல முடியவில்லை. வெல்லவும் முடியாது. திமுக ஆட்சிக்கு எதிர் அலையைவிட ஆதரவான அலையே அதிகம் வீசுகிறது. சூரியன் நிரந்தரமானது. அதேபோன்று திமுகவும் நிரந்தரமானது.

Right Menu Icon