ஈரான், வளைகுடா நாடுகளுடன் ஜெய்சங்கர் அவசர ஆலோசனை..!
மத்திய கிழக்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஈரான், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சர்களுடன் தொலைபேசி வாயிலாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்கான காலக்கெடு நெருங்கி வருவதே இந்த அவசரப் பேச்சுவார்த்தைக்கு முக்கியக் காரணமாகும்.
ஹார்முஸ் ஜலசந்தி வரும் செவ்வாய்க்கிழமைக்குள் திறக்கப்படாவிட்டால், ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த 48 மணி நேரக் கெடு முடிவடைய உள்ள நிலையில், நிலைமையைச் சீர்செய்ய இந்தியா தனது தூதரக ரீதியிலான முயற்சியைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே, ஈரானிய வெளியுறவு அமைச்சர் செய்யத் அப்பாஸ் அராக்சியுடன் ஜெய்சங்கர் தற்போதைய சூழல் குறித்து விவாதித்தார்.
இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட ஜெய்சங்கர், “ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்ஷியிடமிருந்து அழைப்பு வந்தது. தற்போதைய சூழல் குறித்து ஆலோசித்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார். பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து இவர்கள் இருவரும் பேசிக்கொள்வது இது ஆறாவது முறையாகும்.
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் இந்தியா பெரும் சவால்களைச் சந்தித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கப்பல்கள் மட்டுமே இந்த வழியாகச் சென்றுள்ளன. இதனால் இந்தியாவிற்குத் தேவையான எரிவாயு மற்றும் எரிசக்தி விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடும், தடங்கலும் ஏற்பட்டுள்ளது. எரிசக்தி பாதுகாப்பைப் உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருப்பதால், இந்த விவகாரத்தில் இந்தியா கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
ஈரான் தவிர, ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் கத்தார் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சரான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி ஆகியோரிடமும் ஜெய்சங்கர் பேசினார். கடந்த ஐந்து வாரங்களாக அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே நடைபெற்று வரும் போரில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளும் ஈரான் தரப்பிலிருந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைச் சந்தித்துள்ளன. இந்த நாடுகளில் அமெரிக்க ராணுவத் தளம் இருப்பதே இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
மேற்கு ஆசியாவில் போர் நீடிப்பதால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. இதனைத் தணிக்கவும், போரினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. டொனால்ட் ட்ரம்ப்பின் கெடு நாளை முடிவடைய உள்ள நிலையில், வரும் மணித்துளிகள் இப்பிராந்தியத்தின் அமைதிக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.





