நடிகை டாப்ஸி உள்ளிட்ட பிரபலங்களின் வீடுகளில் ஐ.டி. ரெய்டு!
நடிகை டாப்ஸி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிலரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பாண்டோம் பிலிம்ஸ் மற்றும் குவான் ஆகிய நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும், வருவாயை மறைத்துள்ளதாகவும் வருமான வரித்துறைக்கு புகாா்கள் வந்தன. அந்தப் புகாா்களின் அடிப்படையில் இரு நிறுவனங்களுடன் தொடர்புடைய நடிகை டாப்சி, இயக்குநர் அனுராக் காஷ்ப் ஆகியோரின் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றுள்ளது.
நடிகை டாப்ஸி தமிழ், இந்தி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது மும்பையில் வசிக்கிறது. மும்பையில் உள்ள நடிகை டாப்ஸியின் வீடு, இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களின் வீடுகள் இந்த சோதனைக்கு தப்பவில்லை.
இந்தி திரைப்பட தயாரிப்பாளர் மது வர்மா, விகாஷ் பேல் உள்ளிட்டோரின் வீடு, அலுவலங்கள் என, மும்பை மற்றும் புனே நகர்களில் உள்ள 20 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் அனுராஜ் காஷ்யப், இயக்குநர் விக்ரமாதித்யா, தயாரிப்பாளர் மது மண்டேனா, விகாஷ் பால் ஆகிய நால்வரும் இணைந்து 2011-ல் பாண்டோம் ஃபிலிம்ஸ் என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வருமான வரி சோதனையில் கிடைக்கும் ஆவணங்கள், ரொக்கம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த வழக்கு அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்து சென்று விசாரிக்க வருமானவரித்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.





