தீவிர அரசியலில் குதித்தார் ராதிகா! போட்டியிடும் தொகுதி அறிவிப்பு!!
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரான நடிகர் சரத்குமாரின் மனைவியான ராதிகா, வரும் தேர்தலில் சென்னை வேளச்சேரியில் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, அண்மையில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது; பின்னர் பாரிவேந்தரின் ஐஜேகே உடன் கூட்டணி அமைத்துள்ளது. இவ்விரு கட்சிகளும் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது குறித்து, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிட உள்ளதாக சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் விவேகாந்தன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். வேளச்சேரி தொகுதியில் தற்போது திமுக சார்பில் நடிகர் வாகை சந்திரசேகர் எம்எல்ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6வது பொதுக்குழு கூட்டம், தூத்துக்குடியில் உள்ள திரவியபுரத்தில் இன்று நடைபெற்றது. இதில், முதல் நிகழ்வாக கட்சியின் தேர்தல் நடைபெற்றது. கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளராக சரத்குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். புதிதாக கட்சியில் தோற்றுவிக்கப்பட்ட முதன்மை துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு ராதிகா சரத்குமார் தேர்வு செய்யப்பட்டார்.





