கோவையில் தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் வீட்டில் ஐ.டி திடீர் சோதனை..!
திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து ஒட்டப்பட்ட போஸ்டரை கண்டித்து உதயநிதி போராட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் ஐடி சோதனையால் சர்ச்சை !!!
கோவையில் தி.மு.க பிரமுகர் பையா கவுண்டர் (எ) கிருஷ்ணன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் தி.மு.க மாநகர மேற்கு மாவட்ட பொறுப்பாளராக சமீபத்தில் பொறுப்பு கொடுக்கப்பட்டு பதவி வகித்து வருபவர் பையா கவுண்டர் என்கிற கிருஷ்ணன். இவருக்கு சொந்தமான வீடு காளப்பட்டி பிள்ளையார் கோவில் வீதி பகுதியில் உள்ளது. கிருஷ்ணன் ரியல் எஸ்டேட் மற்றும் விவசாயம் செய்து வருகிறார்.

காளப்பட்டி பேரூராட்சி தலைவராக சுயேட்சையாக போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார்.கடந்த 2010 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் கிருஷ்ணன் வீட்டில் சோதனை செய்வதற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் வந்தனர். கிருஷ்ணன் துக்க நிகழ்ச்சிக்காக ஈரோடு சென்றிருந்தார். இதனால் அதிகாரிகள் அவரது வீட்டில் காத்திருந்தனர். ஒன்றரை மணியளவில் கிருஷ்ணன் வீட்டிற்கு வந்தார்.
அப்போது,அங்கு திரண்டிருந்த 30 க்கும் அவரது ஆதரவாளர்கள் கிருஷ்ணனுக்கு ஆதரவாகவும், சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து இரண்டே முக்கால் மணி நேர காத்திருப்பிற்கு பிறகு 2 மணியளவில் வருவான வரித்துறை அதிகாரிகள் வீட்டிற்குள் சென்று சோதனையை துவக்கினர்.தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவையில் தி.மு.க தலைவர் ஸ்டாலினை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டதை கண்டித்து நேற்று முன்தினம் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் தற்போது தி.மு.க நிர்வாகி ஒருவரது வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.






