விண்ணிற்கு அனுப்ப உள்ள பெண் ரோபோவை இஸ்ரோ தலைவர் சிவன் அறிமுகப்படுத்தி உள்ளார்
மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கான சோதனை முயற்சியாக விண்ணிற்கு அனுப்ப உள்ள ரோபோவை இஸ்ரோ தலைவர் சிவன் அறிமுகப்படுத்தியுள்ளார்.ககன்யான் திட்டத்தின்கீழ் விண்வெளி வீரர்களை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப உள்ளது.
இதற்காக தேர்வு செய்யப்பட்ட 4 விண்வெளி வீரர்கள் ஜனவரி மாத இறுதியில் ரஷ்யாவில் பயிற்சி பெறுவதற்காக செல்லவுள்ளனர். இந்த திட்டம் தொடர்பான கருத்தரங்கு பெங்களூருவில் நடைபெற்றது. இதில் இஸ்ரோ தலைவர் சிவன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது 1984-ஆம் ஆண்டு ரஷ்ய விண்கலத்தில் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா விண்வெளி பயணித்தார் என்றும் தற்போது நமது நாட்டில் உருவாக்கப்பட்ட விண்கலத்தில் நமது வீரர்கள் பயணிக்க உள்ளனர் என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார். மனிதனை விண்ணுக்கு அனுப்புவதற்கு முன்னதாக சோதனை முயற்சிக்காக இஸ்ரோ சார்பில் விண்ணுக்கு அனுப்ப உள்ள பெண் ரோபோவை சிவன் அறிமுகப்படுத்தினார்.
பெண்ணை போலவே தத்துரூபமாக உருவாக்கப்பட்டுள்ள அந்த ரோபோவுக்கு வியூ மித்ரா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இந்த ரோபோ விண்ணுக்கு அனுப்பப்படும் என தெரிகிறது.






