ஆளுநர் அரசு நிர்வாகத்தில் நேரடியாக தலையிடுவதா? – இந்தியக் கம்யூ., கண்டனம்
அரசு நிர்வாகத்தில் நேரடியாக தலையிடுவது, மக்களாட்சி முறைமையை தகர்க்கும் செயலாகும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் இன்று (03.07.2026) காலை மதுரையில் மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தியுள்ளார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் அரசுத் திட்டங்கள் அமலாக்கம் பற்றி மட்டும் அல்லாமல், சட்டம் ஒழுங்கு, போதைப் பொருள் ஒழிப்பு, பொது சுகாதாரம், நீர்நிலைகள் பராமரிப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டுள்ளார். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. ஆளுநர் ஆர்.வி.அர்லேகரின் இந்த நடவடிக்கை அரசியலமைப்பு அதிகாரத்தை அத்துமீறிய செயலாகும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் கீழ் அரசிடம், ஆளுநர் தனக்கு வேண்டிய விவரங்களை கேட்டுப் பெற கடமைப்பட்டவர். இதனைத் தவிர்த்து அரசு நிர்வாகத்தில் நேரடியாக தலையிடுவது, மக்களாட்சி முறைமையை தகர்க்கும் செயலாகும்.
இத்தகைய செயலில் ஈடுபடும் ஆளுநர் ஆர்.வி.அர்லேகரின் அதிகார அத்துமீறலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், ஆளுநர் அத்துமீறல் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.





