அணுக்கனிம சுரங்க அரசாணையைத் திரும்பப் பெறுக: தமிழக அரசுக்கு வீரபாண்டியன் வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்கு வழிவகுக்கும் அரசாணையைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இத்திட்டத்திற்கான நில ஒதுக்கீடு அனுமதியைத் தமிழக அரசு நீட்டித்திருப்பது மிகுந்த வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பொதுமக்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு வந்த அணுக்கனிம திட்டத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் இந்த முடிவு தேவையற்ற ஒன்று எனச் சாடியுள்ளார்.
இந்த அணுக்கனிம சுரங்கத்தால் அப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டம், விவசாயம் மற்றும் கடலோர மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் ஆபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும், சுற்றுச்சூழலை அழிக்கும் இத்தகைய கொள்கைகளுக்கு எதிராகத் தமிழக அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுத்து இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் திட்டவட்டமாகக் கோரியுள்ளார்.





