பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய வீரர்கள்..!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், அன்சு மாலிக். ரித்திகா ஹூடா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், ஒலிம்பிக் போட்டிகள் வருகிற ஜூலை 26 ஆம் தேதி தொடங்குகின்றன.
இதில் பங்கேற்கும் மல்யுத்த வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான ஆசிய மண்டல தகுதி சுற்று போட்டிகள் கிர்கிஷ்தான் நாட்டின் பிஷ்கேக் நகரில் நடைபெற்று வருகின்றன.
இதில் மகளிர் 50 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில், இந்தியாவின் வினேஷ் போகத், கஜகஸ்தான் வீராங்கனை லாரா கேனிக்சி-யை வீழ்த்தினார். இதேபோல 57 கிலோ எடைப் பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனை அன்சு மாலிக் உஸ்பெகிஸ்தான் வீராங்கனை லேலோகான் சோபிரோவாவை வீழ்த்தினார்.
76 கிலோ எடைப் பிரிவில், இந்தியாவின் ரித்திகா ஹூடா சீன தைபே வீராங்கனை ஹூய் சங்-ஐ வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்த வெற்றி மூலம் இந்திய வீராங்கனைகள் வினேஷ் போகத், அன்சு மாலிக் ரித்திகா ஹூடா மூவரும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற்றனர். அதே நேரத்தில் 62 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை மான்சி அரையிறுதியில் தோல்வியடைந்ததால், ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தார்.






