பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு..!
இலங்கை அருகே வங்கக் கடலில் உருவான ‘டிட்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னையை நோக்கி நகர்ந்து வந்தது. கடந்த இரண்டு நாட்களாக சென்னைக்கு அருகே நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.
சென்னைக்கு கிழக்கு, தென்கிழக்கே 40 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தென் மேற்கு திசையில் திரும்பி மணிக்கு மூன்று கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்ததாகவும், அது 8 கிலோ மீட்டராக அதிகரித்திருப்பதாகவும் கூறியிருந்தது. இதனைத் தொடர்ந்து தென்மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு – புதுச்சேரி கடற்கரையை நோக்கி மெதுவாக நகரலாம் என்றும், அடுத்த 12 மணி நேரத்திற்கு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அதன் தீவிரத்தை தக்க வைத்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் அதற்கடுத்த 12 மணி நேரத்தில் கடற்கரையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்றும் வானிலை மையம் கணித்திருந்தது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே நாளை(புதன்கிழமை – 03.12.2025) நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யலாம் என்றும் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் திருவள்ளூர் மாவட்டத்துக்கு நாளை (புதன்கிழமை – 03.12.2025) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதேபோல் சென்னை மாவட்டத்துக்கு நாளை (புதன்கிழமை – 03.12.2025) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும் அதேபோல் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகலாம் எனவும், அதற்கான அறிவிப்பு இன்று இரவு அல்லது நாளை காலை வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.





