--- --:--:-- --

ஜெ.என்.யு. பல்கலை., தாக்குதல் நடத்தியது நாங்களே..! இந்து ரக்ஷா தளம் அமைப்பு பொறுப்பேற்பு!!

IMG-20200107-WA0094

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாக வன்முறை சம்பவத்திற்கு இந்து ரக்சா தளம் என்ற இந்து அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

 

தேசவிரோத மற்றும் இந்து விரோத சக்திகளின் மையமாக ஜெ.என்.யு வளாகம் திகழ்ந்ததால் தாக்குதல் நடத்தியதாகவும், இனியும் தாக்குதல் நடத்துவோம் என அந்த அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்ரி என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 5-ந் தேதி, முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நாடு முழுவதும் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த வன்முறைக்கு பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி தான் காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அப் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ் உள்ளிட்ட 19 பேர் மீதே டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

 

இந்த வன்முறையை அரங்கேற்றியது தங்கள் அமைப்பினர் தான் என இந்து ரக்ஷா தளம் என்ற அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்ரி என்பவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், தேசவிரோத மற்றும் இந்து விரோத சக்திகளின் மையமாகவும், புகழிடமாகவும் ஜெ. என்.யு.பல்கலைக்கழக வளாகம் திகழ்ந்ததால் இந்த தாக்குதல் நடத்தினோம்.

 

இது போன்று தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் மற்ற பல்கலைக் கழக மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பிங்கி சவுத்ரி வெளியிட்ட இந்த வீடியோ இப்போது வைரலாகி வரும் நிலையில், அவரை கைது செய்ய விசாரணை நடத்த டெல்லி போலீசார் தீவிரமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon