இதோ இன்னொரு அனிதா…நீட் தேர்வில் ஃபெயிலாகி விடுவோமோ…….பயந்து பயந்தே…… தூக்கில் தொங்கிய கோவை மாணவி!!
கோவையில் நீட் தேர்வு பயம் காரணமாக மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை,ஆர்.எஸ்.புரம் வெங்கடசாமி ரோடு பகுதியில் குடும்பத்தோடு வசித்து வருபவர் ரவிச்சந்திரன் .இவர் கோவை கவுண்டம்பாளையம் அரசு ஐடிஐ யில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் 19வயதான சுபஸ்ரீ, இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நீட் தேர்வு எழுதி சரியான மதிப்பெண்கள் கிடைக்காததால் மருத்துவ படிப்பிற்கு செல்ல முடியாமல் இருந்து வந்தார் .
இதனையடுத்து கோவையில் உள்ள ஆகாஷ் அகாடமியில் நீட் தேர்வுக்கு தொடர்ந்து பயிற்சி பெற்று வந்தார். கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளி,கல்லூரிகள் மற்றும் உயர்கல்வியில் சேருவது குறித்து குழப்பமான அறிவிப்புகள் இருந்து வந்தது.
இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த சில மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும்,செப்டம்பர் மாதம் நீட் தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக ஊரடங்கு காரணமாக சரியான முறையில் பயிற்சிகள் இல்லாமலிருந்த சுபஸ்ரீ இதனால் அதிர்ச்சி அடைந்தார். திடீரென நீட் தேர்வு வந்தால் தன்னால் தேர்வு பெற முடியாமல் போய்விடும் என கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்துள்ளார்.
இந்த முறை நீட் தேர்விலும் தோல்வி அடைந்துவிட்டால் தனது எதிர்காலமே வீணாகிவிடும் என புலம்பியபடியே இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனது அறையில் தூக்குப் போட்டுக் கொண்டார்.சிறிது நேரம் கழித்து அவரது வீட்டில் உள்ளவர்கள் அறைக்கதவை தட்டியபோது திறக்காததால் உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுபஸ்ரீ தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்,அவரை சோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இசசம்பவம் குறித்து ஆர்.எஸ் புரம் போலீசில் போலீசார் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும்,இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டுதோறும் நீட் தேர்வினால் மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. இதேபோல கோவையிலும் அரசு அலுவலர் ஒருவரின் மகள் நீட் தேர்விற்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் எத்தனை அனிதாக்களை இழக்க போகிறோமோ தெரியவில்லை.







