தமிழகத்தில் இன்று இந்த 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்த நிலையில், ராசிபுரத்தில் அரசு மருத்துவமனையில் தண்ணீர் தேங்கியதால் நோயாளிகள் அவதிக்கு உள்ளாகினர். கோவை, நீலகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், ஆலாங்குப்பம், பெரியாங்குப்பம் உள்ளிட்ட இடங்களில் ஆலங்கட்டி மழை பொழிந்தது. விண்ணமங்கலத்தில் உள்ள நாகலம்மன் கோயில் வளாகத்தில் இருந்த பூவரச மரம் கனமழையால் முறிந்து, வீட்டின் மீது விழுந்தது. அதே பகுதியில் உள்ள தண்டு மாரியம்மன் கோயில் அருகில் இருந்த ஆலமரமும் கனமழையினால் வேருடன் சாய்ந்து கோயில் மீது விழுந்தது.
ஆம்பூர் சுற்றுவட்டாரத்தில் 3 மணிநேரத்துக்கும் மேலாக பெய்த மழையால், மின் விநியோகம் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, சேவூர், குன்னத்தூர், காமக்கூர் உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. பலத்த காற்று காரணமாக மேல்நகர் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த மினி பேருந்து மீது புளியமரம் சாய்ந்ததில் ஓட்டுநர் உட்பட பத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் செங்கப்பள்ளி, பெருமாநல்லூர், சர்க்கார் பெரியபாளையம் உள்ளிட்ட இடங்களில் மாலை நேரத்தில் பலத்த மழை பெய்தது. ஈரோட்டில் கருங்கல்பாளையம், மூலப்பாளையம், வீரப்பன்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், சாலைகளில் தண்ணீர் சூழ்ந்தது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற சந்தை நிலையில், வியாபாரிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்கு உள்ளாகினர். ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியதால், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
கரூர் மாவட்டத்தில் புலியூர், மணவாசி, மாயனூர், கோரகுத்தி, சேங்கல், கிருஷ்ணராயபுரம், பஞ்சப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருச்சி மாநகரில் ஸ்ரீரங்கம், சத்திரம் பேருந்து நிலையம், உறையூர், தில்லை நகர், தென்னூர், கண்டோன்மென்ட், டி.வி.எஸ். டோல்கேட், கே.கே.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெய்த மழையால், குளுமையான சூழல் நிலவியது.





