தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ..!
தமிழகத்தில் சிவகங்கை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனத்தால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அந்த மையத்தின் இயக்குனர் புவியரசன் கூறியுள்ளார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும், காரைக்கால் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். இதேபோல் அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று புவியரசன் கூறினார்.
அரபிக்கடல் தென்கிழக்கு, தென்மேற்கு, மத்தியகிழக்கு லட்சத்தீவு, கர்நாடகாவின் கரையோரப் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.







