--- --:--:-- --

மதுரையில் சாலையோரத்தில் அனாதையாக திரியும் ஆதரவற்றோர்களுக்கு மறுவாழ்வு அளித்து உதவி செய்து வருகிறது இதயம் அறக்கட்டளை

0.4

மதுரையைச் சேர்ந்தவர் சிவக்குமார். உயர்நிலைக்கல்வியைக் கூட தாண்டாத இவர் போட்டோகிராபராக உள்ளார். சாலையில் ஒரு நாள் போட்டோ எடுக்கும்போது சாலையில் திரியும் ஆதரவற்றோர்களை பார்த்து மனம் கலங்கினார். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

 

அப்போது சேவை நோக்கம் உள்ள பல தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து “இதயம் அறக்கட்டளை” என்ற சமூக சேவை நிறுவனத்தை தொடங்கினார். அறக்கட்டளை நிர்வாகிகள் எல்லோரும் ஆளுக்கு ஒரு பகுதியாக சென்று குடும்பசூழல், மனநோயால் ரோட்டில் திரிபவர்கள் மற்றும் பிள்ளைகளால் கைவிடப்பட்ட ஆதரவற்றவர்கள்,பெற்றோரை இழந்து அனாதைகளாக சாலையில் திரிபவர்கள் என பலதரப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து முடிந்தவரை குடும்பத்துடன் சேர்க்கின்றனர். குடும்பம், வீடு இல்லாதவர்களை அரசு காப்பகத்தில் சேர்க்கின்றனர்.

 

இப்படி கடந்த 15 வருடங்களில் 1800 பேர்வரை கண்டறிந்து அதில் 1200 பேரை கவுன்சிலிங் செய்து குடும்பத்துடன் சேர்த்து விட்டனர். மீதம் உள்ள 600 பேரை அரசு காப்பகம் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்த்துள்ளனர்.

 

தற்போது ஊரடங்கு காலத்தில் ஆதரவற்றவர்கள், குடும்ப பிரச்சனை காரணமாக சாலையில் திரிபவர்கள், ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்கள், ஊனமுற்றவர்கள் என 360 பேர் வரை கண்டறிந்து அவர்களை மதுரையில் உள்ள காக்கைப்பாடினியார் மாநகராட்சி பள்ளியில் தங்கவைத்து உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பிற தன்னார்வலர்கள் உதவியுடன் கொடுத்து வருகிறார்கள்.

 

இதில் குடும்பம் உள்ளவர்களை கவுன்சிலிங் செய்து குடும்பத்துடனும், மற்றவர்களை காப்பகங்களிலும் சேர்த்தனர். இது போக 76 பேர்களை தற்போது பள்ளியில் தங்கவைத்துள்ளனர். இவர்களுக்கு நிரந்தரமாக தங்குவதற்கு கலெக்டரிடமும் மாநகராட்சி கமிஷனரிடமும் இடம் கேட்டு முறையிட்ட நிலையில் ரிசர்வ்லைனில் உள்ள ஒரு மாநகராட்சி கட்டிடத்தை இவர்களுக்கு கொடுக்க மாநகராட்சி கமிஷனர் உறுதி அளித்துள்ளார்.

 

மேலும் இவர்களுக்கு மதுரையில் பல ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் சாய் விருஷா டிரஸ்ட், இதயம் அறக்கட்டளை சேவையை பாராட்டி ஒரு ஆம்னி வேன் தானமாக கொடுத்துள்ளது. மேலும் பல உதவிகளை சாய் விருஷா டிரஸ்ட் செயலர் உஷா பார்த்தசாரதி, டிரஸ்ட் தலைவர் சுதன்பாலா ஆகியோர் செய்துள்ளனர். மேலும் அண்ணாநகர் உதவி காவல் ஆணையர் லில்லி கிரேஸ் இதயம் அறக்கட்டளை சேவையை பாராட்டி பல உதவிகளையும் செய்துள்ளார்.

 

மேலும் இதயம் சேவையில் தன்னார்வலர்கள் அருண்குமார், அர்ஜூன்கார்த்திக், வீரச்செல்வி, மதர்ஷா, கலைவாணி, அப்சர், கனிமொழி, குத்தாலிங்கம், அய்யனார் போன்றவர்களும் இணைந்து பணியாற்றுகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon