கொரோனா சிகிச்சை கட்டணம் தொடர்பாக மாநில அரசுகளே முடிவெடுக்க வேண்டும்..!
தனியார் மருத்துவமனைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருவதா, கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக தமிழக அரசு தான் பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகளில் கொரொனா சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பான வழக்கில் அறிக்கை தாக்கல் செய்த தமிழக அரசு தனியார் மருத்துவமனைகளில் லேசான அறிகுறிகளுடன் சிகிச்சை பெறுபவர்களுக்கு ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் ரூபாய் முதல் 7,500 ரூபாய் வரை கட்டணமாக நிர்ணயம் செய்து இருப்பதாகவும், தீவிரமாக தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்து இருப்பதாகவும் கூறி உள்ளது.

மேலும் கொரொனா சிகிச்சைக்கு 25 விழுக்காடு படுக்கைகளை ஒதுக்கிவைக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தனியார் மருத்துவமனைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருவதால் கொரொனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக தமிழக அரசுதான் பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு விசாரணையை வரும் 19ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.







