ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கு காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு
ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மார்ச் 31ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கணக்கை செலுத்துபவர்களின் சிரமங்களை அரசு உணர்ந்து, அதனை செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் 2019 மற்றும் 20ம் நிதியாண்டுக்கான ஜிஎஸ்டி ஆண்டு கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜிஎஸ்டி கணக்கு தாக்கலுக்கான காலக்கெடு கடந்தாண்டு டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், 2021 பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இச்சூழலில், இந்த அவகாசம் 2வது முறையாக காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜிஎஸ்டி கணக்கை மார்ச் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து பலமுறை அறிவுறுத்திய பிறகும் ஜிஎஸ்டி செலுத்த தவறினால் அவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்கும் வகையில் விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





