மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை குறித்து ஆளுநர்கள் மாநாடு..!
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை குறித்து அனைத்து மாநில ஆளுநர்கள் பங்கேற்கும் மாநாடு இன்று நடைபெறுகிறது. காணொலி முறையில் நடக்கும் இந்த மாநாட்டில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தும் பிரதமர் மோடியும் தொடக்க உரையாற்ற உள்ளனர்.
அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள், அரசு பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் உள்ளிட்டோரும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். புதிய கல்விக் கொள்கையால் உயர் கல்வியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ற தலைப்பிலான இந்த மாநாட்டை மத்திய கல்வி அமைச்சகம் நடத்துகிறது.
இதற்கிடையில் இந்த மாநாடு குறித்து பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்டு உள்ளது. 34 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ள புதிய கல்விக் கொள்கை இந்தியாவை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது என்றும் இது நம் நாட்டை அறிவுசார் சமூகமாக மாற்றி உலகின் வல்லரசாக உயர்த்த உதவும் என்றும் பிரதமர் அலுவலகத்தின் டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.






