இனி சாணி பவுடர் விற்றால் கடைக்கு ” சீல் “.கோவை மாவட்ட காவல் துறை எச்சரிக்கை !!!
கோவை மாவட்டத்தில் உள்ள சிறிய பெட்டிக் கடை முதல் பெரிய மளிகை கடைகள் வரையிலும் அனைத்து இடங்களிலும் சாதாரணமாக மஞ்சள் நிற சாணி பவுடர் விற்பனை நடைபெற்று வருகிறது. வீடுகளில் வாசல் தெளிப்பதற்கும், கோயில்களில் மாட்டுசாணத்துடன் கோவில் வாசல் பூசுதவற்கும் மஞ்சள் சாணிபவுடரை பயன்படுத்தி வந்தனர்.
ஆனால்,மஞ்சள் சாணி பவுடரை குடித்து மக்கள் தற்கொலைக்கு முயற்சி செய்ததால் சாணிப்பவுடரை அரசு தடை செய்து உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் கடைகளில் யார் சென்று கேட்டாலும் மஞ்சள் சாணிபவுடரை இல்லை என்று சொல்லாமல் கொடுத்து விடுகிறார்கள்.
இதனால் குடும்பங்களில் ஏற்படும் சிறுசிறு பிரச்சனைக்கு கூட சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மஞ்சள் சாணிப்பவுடரை பயன்படுத்தி தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். அதில் பலர் இறந்து விடுகிறார்கள்.
கோவை மாவட்டத்தில் சமீப காலமாக உயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய மஞ்கள் சாணிபவுடர் நச்சு பொருளை சட்டவிரோதமாக
விற்பனைக்கு வைத்திருந்த குற்றத்திற்காக சிறுமுகை காவல் நிலைய எல்லையில் கடந்த இரு தினங்களில் நான்கு வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய மஞ்சள் நிற சாணி பவுடரை உணவு பொருட்களை விற்பனை செய்யக்கூடிய மளிகை கடைகளில் விற்பனைக்கு வைத்திருப்பது கண்டறியப்பட்டால் கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வதுடன், வருவாய் துறையின் மூலம் அந்த கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






