தீயின் கோரப் பசிக்கு கொரோனா நோயாளிகள் இரையாகும் கொடுமை தொடர்கிறது… ஆந்திராவில் கோவிட் சென்டரில் தீ விபத்து… 11 பேர் உயிரிழந்த சோகம்!!
குஜராத்தை தொடர்ந்து ஆந்திராவில் கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த சொகுசு ஹோட்டலில் தீப்பிடித்ததில் மூச்சுத் திணறி 11 பேர் உயிரிழந்த சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அரசு தரப்பில் மட்டும் சிகிச்சை வழங்குவது சவாலாக உள்ளது. பாதிப்பு எண்ணிக்கை பல லட்சங்களை கடந்த நிலையில், அரசு மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன. போதிய படுக்கை வசதி, மருத்துவப் பணியாளர் பற்றாக்குறை காரணமாக தனியார் மருத்துவ மனைகள், தற்காலிக முகாம்கள், தனியார் ஹோட்டல்களிலும் நோயாளிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா நோயாளிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை, தனியாரில் கூடுதல் கட்டண கொள்ளை என்ற புகார்கள் வரிசை கட்டும் நிலையில், திடீர் தீ விபத்துகளாலும் கொரோணா நோயாளிகளின் உயிர் பறிபோகும் சம்பவங்கள் நிகழ்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 3 தினங்களுக்கு முன் குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா சிறப்பு வார்டில் அதிகாலை நேரத்தில் திடீரென தீப்பிடித்தது. இதில் அவசர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 8 நோயாளிகள் புகை மூட்டத்தால் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
இந்த சோகம் மறைவதற்குள், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், கோவிட்19 சிறப்பு மையமாக செயல்பட்டு வந்த சொகுசு ஓட்டலில் இன்று மேலும் ஒரு தீ விபத்து ஏற்பட்டு 11 பேரின் உயிர் பறிபோகியுள்ளது. விஜயவாடாவின் ஏழுரு சாலையில் உள்ள இந்த சொகுசு ஓட்டலை குத்தகைக்கு எடுத்து தனியார் மருத்துவமனை ஒன்று கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது. 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் அவசர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் சப்போர்ட்டில் இருந்தனர்.
இன்று அதிகாலை இந்த ஹோட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி எரிந்தது. இதில் புகை மூட்டமும் சேர்ந்ததால் மீட்பு பணி சிரமமான நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 11 கொரோனா நோயாளிகள் மூச்சுத் திணறி இறந்தனர். மேலும் பலர் ஜன்னல்கள் வழியே அபயக்குரல் எழுப்பு மீட்புப் படையினால் ஜன்னல்களை உடைத்து மீட்டனர்.







