ரேசன் ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற “ஸ்டிரைக்” …! பணிக்கு வராவிட்டால் சம்பளம் “கட்”..! தமிழக அரசு எச்சரிக்கை!!
தமிழகம் முழுவதும் ரேசன் கடை ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், பணிக்கு வராவிட்டால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா பரவல் ஆரம்பித்த காலம் முதல் அதிக பணிச்சுமைக்கு ஆளானவர்களில் ரேசன் கடை ஊழியர்களும் முக்கியமானவர்கள் ஆவர். கடந்த 4 மாதங்களாக இலவசமாக ரேசன் பொருள் விநியோகம் செய்வது, தமிழக அரசு வழங்கிய ரூ.1000 நிவாரணம் உள்ளிட்ட வற்றை வழங்குவது வழங்குவது போன்ற பணிகளில் முழு வீச்சில் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவருக்கும் தலா இரண்டு முகக் கவசங்கள் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படவும் உள்ளது.
இப்படி பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிகம் கூடுவதால், பாதுகாப்பு இல்லாத சூழலில் கொரோனா அச்சத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக புலம்பும் ரேசன் கடை ஊழியர்கள், தங்களுக்கு காப்பீடு, ஊக்கத்தொகை உள்ளிட் மேலும் சில சலுகைகளை வழங்க வலியுறுத்தி வருகின்றனர். இதனால் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே பணிக்கு வராவிட்டால் ஊதியம் இல்லை என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ரேசன் கடைகளில் பொருட்கள் வழங்குவது தடைபடாமல் இருக்க மாற்று ஏற்பாடுகளை செய்யுமாறும் அனைத்து மாவட்ட கூட்டுறவு பதிவாளர்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.







