--- --:--:-- --

காய் நகர்த்தும் கம்யூனிஸ்ட்கள்: திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் பதவி மீது கண்..! திமுகவினரின் கனவில் “தோழர்கள் ”மண்

f55378e0-54b6-4f3c-8b1b-f4cb496b55d8

பூண்டி நகராட்சித் தலைவர் பதவிக்கு குறிவைத்து, ரகசியமாக கம்யூனிஸ்டுகள் காய் நகர்த்துவதாக, அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இது, தலைவர் பதவி கனவில் உள்ள திமுகவினருக்கு அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

 

பேரூராட்சியாக இருந்த திருமுருகன்பூண்டி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, நடந்து முடித்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மூலம், முதல் முறையாக தேர்தலை சந்தித்தது. அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட பூண்டியில், இம்முறை சிறிய ஓட்டை விழுந்துள்ளது.

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக கூட்டணி பூண்டி நகராட்சியை கைப்பற்றி இருக்கிறது. மொத்தமுள்ள 27 இடங்களில் திமுக கூட்டணி 17 இடங்களை கைப்பற்றி இருக்கிறது. இதில் திமுக 9 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 5 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதே நேரம், தனித்து களமிறங்கிய அதிமுக, 10 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சியாக உள்ளது.

 

திருமுருகன்பூண்டி நகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ள நிலையில், அடுத்ததாக தலைவர் பதவிக்கான தேர்வு குறித்து திமுகவினர் ஆலோசித்து, கட்சி தலைமையகத்திற்கு தெரியப்படுத்தி உள்ளனர். திமுக வட்டாரங்களில் விசாரித்தவரை, 26-வது வார்டில் வெற்றி பெற்றுள்ள குமார், நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது. துணைத் தலைவர் பதவிக்கு 25-வது வார்டில் திமுக சார்பில் வெற்றி பெற்ற, நகரச் செயலாளராக இருக்கும் பாரதி, தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

 

திமுக கூட்டணியில் திமுக மட்டும் 9 இடங்களை பெற்றிருந்தாலும், தோழமைக் கட்சிகளான கம்யூனிஸ்டுகள், 8 இடங்களை வென்றுள்ளது. எனவே, கம்யூனிஸ்ட் சார்பில், துணைத் தலைவர் பதவிக்கு சீட் கேட்க, தோழர்கள் தயாராகி வருகின்றனர்.

 

காய் நகர்த்தும் கம்யூனிஸ்ட்கள்

 

இதனிடையே, பூண்டி நகராட்சித் தலைவர் பதவிக்கு நாம் ஏன் உரிமை கோரக்கூடாது என்று , கம்யூனிஸ்டுகள் சிலர் யோசிக்க தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக, கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரங்களில், சிலர் நம்மிடம் பேசியதாவது:

 

இடதுசாரி கட்சிகளுக்கும், திமுகவுக்கும் நீண்டகாலமாக அரசியல் ரீதியான நட்பு உள்ளது. அதே நேரம், தேர்தல் நேரங்களில் சீட் ஒதுக்கும் விஷயத்தில், திமுக தலைமை கறாராகவே நடந்து கொள்ளும். கம்யூனிஸ்ட்டுகள் கேட்கும் எண்ணிக்கையில் சீட் ஒதுக்கப்படுவதில்லை; அள்ளித் தராமல், கிள்ளியே தருவார்கள்.

 

எனினும் கூட்டணி தர்மம் கருதியும், தோழமை கருதியும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும், தொண்டர்களும், திமுகவுக்காக களப்பணியாற்றி வந்திருக்கிறோம். இப்போது நடந்து முடிந்த தேர்தலில் கூட, தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகள், பெரும்பாலான நகராட்சிகளை திமுக கைப்பற்றி இருக்கிறது.

 

பூண்டி நகராட்சியை பொருத்தவரை, தனிப்பெருங்கட்சியாக திமுகவும் பெரும்பான்மை பலம் இல்லை; கம்யூனிஸ்ட்டுகளின் எண்ணிக்கை சேர்ந்தால் மட்டுமே, பெரும்பான்மை பலம் என்பதே யதார்த்தம். எனவே, பிரதிபலன் பார்க்காமல் உழைக்கும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு, அதன் கோட்டையான திருப்பூரில், பூண்டி நகராட்சியிலாவது நகராட்சித் தலைவர் பதவியை தந்து, திமுக அழகு பார்க்க வேண்டும் எதிர்பார்க்கிறோம்.

 

இப்போது கூட, அதிமுகவுடன் கம்யூனிஸ்ட் கைகோர்த்தால், பூண்டி நகராட்சியின் தேர்தல் வெற்றி நிலவரமே தலைகீழாகிவிடும். ஆனால், அப்படிப்பட்ட துரோக அரசியல் செய்வது என்பது, கம்யூனிஸ்டுகளின் அரசியல் வரலாற்றில் என்றைக்கும் இடமில்லை.

எனவே, திருப்பூரில் உள்ள திமுக தலைமையும், அமைச்சர்களும், சென்னையில் உள்ள திமுக தலைமைக்கு, திருமுருகன்பூண்டியில் நிலவரத்தை எடுத்துரைக்க வேண்டும்; கம்யூனிஸ்டு கட்சிக்கு நகராட்சித் தலைவர் பதவியை ஒதுக்க, திமுக முன்வர வேண்டும். துணைத் தலைவர் பதவியை திமுகவினருக்கு, மகிழ்ச்சியோடு வழங்க, நாங்கள் தயாராக உள்ளோம். திமுகவிடம் இருந்து நல்ல பதிலை எதிர்பார்க்கிறோம், என்று பெயர் வெளியிட விரும்பாத கம்யூனிஸ்ட் மூத்த பிரமுகர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.

 

இதனிடையே, பூண்டி நகராட்சித் தலைவர் பதவியை குறிவைத்து, கம்யூனிஸ்ட் கட்சியினர் காய் நகர்த்தும் தகவலை அறிந்து, பூண்டி திமுக பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தலைவர் பதவிக்கு தோழர்கள் குறி வைப்பது, தங்களது கனவில் மண் போடுவது போல் ஆகிவிடுமே என்று, வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

 

பூண்டி நகராட்சி தலைவர் பதவி வேண்டுமென்று திடீர் கோஷத்தை முன்வைத்துள்ள தோழர்கள், அதை வலியுறுத்தி, திமுகவுக்கு எதிராக கொடி பிடிப்பார்களா? அல்லது திமுகவுக்கு தலைவர் பதவியை விட்டுத் தந்து, துணைத் தலைவர் பதவியை ஏற்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon