முந்தினார் எடப்பாடி! ஈபிஎஸ் 20, ஆயிரம்… ஸ்டாலின் 12 ஆயிரம்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், கடந்த ஒரு மாத பிரசார பயணத்தில், திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முந்தினார். ஈபிஎஸ் 20, ஆயிரம் கி.மீ. பயணித்த நிலையில், ஸ்டாலின் 12 ஆயிரம் கி.மீ. தான் சென்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம் – புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், ஒரே கட்டமாக நாளை நடைபெறவுள்ளது. நாளை காலை 7 மணி முதல், இரவு 7 மணி வரை தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
கடந்த ஒருமாதமாக தமிழகத்தில் நடைபெற்று வந்த சூடுபறக்கும் பிரசாரம், நேற்று மாலையுடன் ஓய்ந்தது. அதிமுக தரப்பில் முதல்வர் பழனிச்சாமி, தனிஒருவராக தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரசாரம் செய்து வருகிறார். தி.மு.க சார்பில் ஸ்டாலின் மட்டுமின்றி உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதுதவிர மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்டோரும் தமிழகத்தை சுற்றி வந்து பிரசாரம் செய்னர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்தவெளி வேனில் தமிழகம் முழுவதும் பயணித்து பிரச்சாரம் செய்தனர். திமுக தலைவர் ஸ்டாலினும், முதலில் கிராமசபை கூட்டம் நடத்தி வாக்கு சேகரித்தார். பின்னர் வேனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டர். முதல்வர் பழனிசாமி தனது பிரசாரத்தில் அதிமுக அரசு செயல்படுத்திவரும் திட்டங்களையும், சாதனைகளையும் குறிப்பிட்டு வாக்கு சேகரித்தார்.
பிரசாரத்தில் ஸ்டாலின் சொல்லும் விமர்சனங்களுக்கு சூட்டோடு சூடாக பதிலளித்தார். பிற எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதிலளித்தும், அவர்களை விமர்சித்தும் பிரச்சாரம் செய்தார். குறிப்பாக தவழ்ந்து, ஊர்ந்து சென்று பதவி ஏற்றார் என்ற விமர்சனத்துக்கு, ஊர்ந்து செல்ல நான் என்ன பாம்பா? பல்லியா என, முதல்வர் எடப்பாடி ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
தனது பிரசார பயணத்தில் முதல்வர் பழனிசாமி 20 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, 234 தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்துள்ளார். ஏறத்தாழ 250 இடங்களில், மக்களை நேரில் சந்தித்திருக்கிறார். கடந்த 2 நாட்களாக, சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் வாக்கு சேகரித்தார். தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் நேற்றிரவு பிரசாரத்தை நிறைவு செய்தார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தனது பிரசாரத்தில் அதிமுகவை அடிமை அரசு என்றார். அதிமுக பெயரில் பாஜக ஆட்சி நடக்கிறது என்றார். பொள்ளாச்சி சம்பவம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ,முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதான புகார்களை கூறி பிரச்சாரம் செய்தார். ஒருசில தொகுதிகளில் நடைபயிற்சி மேற்கொண்டும், டீக்கடைகளுக்கு சென்றும் மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார்.
ஸ்டாலின் தனது பிரசாரத்தில் 234 தொகுதிகளிலும், புதுச்சேரி மாநிலத்தின் 30 தொகுதிகளிலும், கடந்த 21 நாட்களில் 70 கூட்டங்களில் பேசியிருக்கிறார். இதற்காக அவர் 12 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்திருக்கிறார். பிரசாரத்திற்கு கடைசி நாளான நேற்று, தான் போட்டியிடும் கொளத்தூரில் பிரச்சாரத்தை மு.க. ஸ்டாலின் நிறைவு செய்தார்.
எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் இருவரில் அதிக இடங்கள், அதிக தொலைவு என்ற அடிப்படையில் எடப்பாடியே முந்துகிறார். தேர்தலில் முந்துவது யார் என்பது மே 2ம் தேதி தெரிந்துவிடும்.





