நாளை மறுநாள் தேர்தல்… தமிழகத்தில் இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அனல்பறக்க நடைபெற்று வரும் அரசியல் கட்சித் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 7 மணியுடன் ஓய்வு பெறுகிறது.
தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு, ஒரே கட்டமாக நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், கடந்த பல வாரங்களாக தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதிமுக தரப்பில் முதல்வர் பழனிச்சாமி, தனிஒருவராக தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரசாரம் செய்து வருகிறார். தி.மு.க சார்பில் ஸ்டாலின் மட்டுமின்றி உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதுதவிர பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி. நட்டா, காங்கிரஸ் தரப்பில் ராகுல் உள்ளிட்டவர்கள் தமிழகத்திற்கு வந்து பிரசாரம் செய்துவிட்டு சென்றுள்ளனர்.
இதுதவிர, வேட்பாளர்கள் தங்களது சொந்தத் தொகுதியில் வாக்காளர்களை கவர பல்வேறு உத்திகளை கையாண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். தோசை சுடுவது, டீ போடுவது, களை பறிப்பது, மாவு ஆட்டுவது, சலவை செய்வது என்று வேட்பாளர்களின் அட்டகாசங்களுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது. இவ்வாறு கடந்த ஒருமாதமாக நடைபெற்று வந்த அனல்பறக்கும் பிரசாரம் இன்று மாலை 7 மணியுடன் நிறைவு பெறுகிறது.
வழக்கமாக தேர்தலுக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் மாலை 5 வரை தேர்தல் பிரச்சாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும். இந்தமுறை 7 மணி வரை பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி தந்துள்ளது.





