ஜெயலலிதாவை பற்றி பேச ஸ்டாலினுக்கு என்ன தகுதி உள்ளது எனக்கேட்ட டிடிவி தினகரன்..!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி பேச திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கும், ஆ. ராசாவுக்கும் என்ன தகுதி இருக்கிறது என அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாகரீக அரசியலுக்கும், திமுகவுக்கும் எந்த காலத்திலும் சம்பந்தமில்லை என குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் நிர்வாகத்தை சீர்குலைத்த பல ஊழல்களின் ஊற்றுக்கண் திமுக என குற்றம் சாட்டியுள்ள தினகரன் சர்க்காரியாவில் இருந்து தப்பிக்க கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்தது யார் என்றும் வினவியுள்ளார்.
திமுக தலைவர் மு க ஸ்டாலினும், அந்த கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ராசாவும் நாகரீகத்துடன் பேசவேண்டும் என்றும் ஜெயலலிதா பற்றி நாகரிகம் இன்றி பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.






