நெல்லையில் திமுக இளைஞரணி நிர்வாகி வெட்டிக் கொலை..! முன்விரோதம் காரணமா?
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை. இவர் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை தனது வீட்டில் இருந்து ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள கோழிப் பண்ணைக்கு இருசக்கர வாகனத்தில் செல்ல துரை சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் சிலர் செல்லதுரையை வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு முக்கூடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்துச் செல்ல துரையின் உடற்கூறு பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்யக்கோரி செல்லத்துரையின் உறவினர்களும் திமுகவினரும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். செல்லதுரைக்கும் அவர் வீட்டு அருகே உள்ள சிலருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படும் நிலையில் கடந்த வாரம் நடந்த தேரோட்ட நிகழ்ச்சியில் சிலருடன் செல்ல துரைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
எனவே அதன் காரணமாக கொலை நிகழ்ந்ததா என்றும் அது குடும்பத் தகராறு மற்றும் அரசியல் காரணங்களுக்காக கொலை நடந்ததா என்றும் முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்லதுரை படுகொலையைத் தொடர்ந்து முக்கூடல் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.






