மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு விவகாரம் : ஆளுநருக்கு எதிராக சேர்ந்து போராட அதிமுகவுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தர தாமதம் செய்யும் ஆளுநருக்கு எதிராக சேர்ந்து போராடுவோம் என அதிமுகவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7 .5% இடஒதுக்கீடு வழங்க தமிழக சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டு கடந்த செப்டம்பர் 14-ந் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு ஒரு மாதம் கழிந்த பின்னரும் இன்னும் கையெழுத்திடாமல் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காலம் கடத்தி வருவது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
தற்போது நீட் தேர்வு முடி வெளியாகி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையும் தொடங்கும் நிலையில், ஆளுநரின் காலம் கடத்தும் செயல் பல தரப்பிலும் பெரும் விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் ஆளாகியுள்ளது. பாமக ராமதாஸ், மதிமுக வைகோ ஆகியோர், ஆளுநர் உள்நோக்கத் செயல்படுவதாகவே பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
தமிழக அரசோ இந்த விவகாரத்தில் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாத கதையாக ஆளுநருக்கு நெருக்கடி கொடுக்க தயங்கி விழி பிதுங்கி நிற்கிறது. நேற்று கூட 5 மூத்த அமைச்சர்கள் ஆளுநரை நேரில் சந்தித்து ஒப்புதல் வழங்குமாறு கோரிக்கை மட்டுமே வைத்து விட்டு வந்துள்ளனர். வெளியில் வந்த அமைச்சர்களும், ஆளுநர் விரைவில் ஒப்புதல் வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளதாக மட்டுமே தெரிவித்தனர்.
“ஆளுநருக்கு எதிராக சேர்ந்து போராட
அதிமுகவுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு”!
இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழ மசோதாவுக்கு உடனே ஒப்புதல் வழங்குமாறு கோரி தமிழக ஆளுநருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக இணைந்து போராட வருமாறு அதிமுகவுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது:
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக்கோரி ஆளுநருக்கு திமுக சார்பில் கடிதம் எழுதியுள்ளேன்.
இந்த நேர்வில் ஆளுநருக்கு எதிராக அதிமுகவுடன் இணைந்து போராட திமுக தயார்.
மற்ற கட்சிகளுடன் கலந்து பேசி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போராட்டம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என விட்டுள்ளது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







