--- --:--:-- --

தேர்தல் களத்தில் திருப்பம்… கமல் கட்சியுடன் காங்கிரஸ் ரகசிய ஆலோசனை!!

Kamal congress

திமுகவுடன் தொகுதிப்பங்கீடு சிக்கல் நீடித்து வரும் சூழலில், தேர்தல் களத்தில் திடீர் திருப்பமாக, மக்கள் நீதிமய்யம் கட்சியுடன் காங்கிரஸ் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திவிட்டு கமல் ஆலோசனை நடத்தியுள்ளார்.

 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒருவாரம் கூட இல்லாத சூழலில், தொகுதிப் பங்கீடு விஷயத்திலேயே இன்னமும் அதிமுக – திமுக அணிகளில் இழுபறி நீடித்து வருகிறது. குறிப்பாக திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இன்னமும் ஒரு முடிவு எட்டப்படவில்லை.

 

காங்கிரஸ் தரப்பில் 41 தொகுதிகள் கேட்ட நிலையில் திமுகவோ 20 என்ற எண்ணிக்கையில் இருந்து சற்று அதிகரித்து 24 தொகுதிகள் வரை வழங்க முன்வந்துள்ளது. காங்கிரஸ் தரப்பில் 35, பின்னர் 30 தற்போது 28 தொகுதிகள் என்று விட்டுக் கொடுத்துள்ளனர். எனினும் இரு தரப்புக்கும் இடையே 4 தொகுதிகளில் தான் முட்டுக்கட்டை நீடிக்கிறது.

 

இதையடுத்து, நேற்று காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அதன் தலைவர் கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் ஆலோசனை நடத்தினர் அந்த கூட்டத்தில் பேசிய அழகிரி, திமுக தொகுதிகளை குறைப்பதுடன் நடத்தும் முறை குறித்தும் கண்ணீருடன் குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் பலரும், 2011-ம் ஆண்டு தேர்தலில் 60 தொகுதியைக் கொடுத்தார்கள். 2016-ல் அதை 41 ஆகக் குறைத்தார்கள். இப்போது அதைவிடவும் குறைவாக கொடுப்பதா என்று ஆவேசப்பட்டனர். திமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டுமென்றும் சிலர் பேசினர்.

 

இதனிடையே, ‘மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் நல்லது’ என்று மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் கூறியிருக்கிறார். இதனால், காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் ஒருவித மனமாற்றம் தென்படுகிறது. திமுக இனியும் அவமானப்படுத்தினால், கூட்டணியில் இருந்து வெளியேறி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி வைக்கலாமா என்று யோசிக்கத் தொடங்கியுள்ளனர்.

 

இந்த சூழலில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், சென்னையில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்ல் கோடம்பாக்கம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கமல்ஹாசன், திடீரென தேர்தல் பிரசாரத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

 

அந்த நேரத்தில், கமல்ஹாசனுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. திமுக- காங்கிரஸ் உறவில் முறுகல் நிலை நீடிக்கும் சூழலில், மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் ரகசியமாக ஆலோசனை நடத்தியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

மூன்றாவது அணி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கே.எஸ். அழகிரி முன்பு கூறியிருந்தார்; ஒருவேளை திமுகவை வழிக்கு கொண்டு வருவதற்காக காங்கிரஸ் தரப்பில் கமல்ஹாசனுடன் பேச்சு என்று பூச்சாண்டி காட்டுகிறார்களா என்ற சந்தேகத்தையும் சிலர் எழுப்பியுள்ளனர். கமல் கட்சியுடன் காங்கிரஸ் கைகோர்க்குமா என்பது நாளைக்குள் தெரிய வரும் என்று மக்கள் நீதிமய்யம் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Right Menu Icon