தேமுதிக வேட்பாளர்கள் திடீர் மாற்றம்… விஜயகாந்த் அதிரடி!
கரூர் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கான தேமுதிக வேட்பாளர்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வெளியாகின்றன. வாக்குப்பதிவுக்கான நாள் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரசாரப் பணிகளையும் தொடங்கிவிட்டன.
நடப்பு சட்டமன்றத் தேர்தலில் அமமுக கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது. இக்கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளுக்கு தேமுதிக வேட்பாளர் பட்டியலையும் அண்மையில் கட்சித் தலைமை வெளியிட்டது. அதன்படி, கரூர் சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளராக ரவி அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கரூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். ரவிக்கு பதிலாக தங்கராஜ் தேமுதிக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக ரவி விலகிக் கொள்வதாக கூறப்பட்டதை அடுத்து, வேட்பாளராக தங்கராஜை நியமித்து, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதேபோல், பரமக்குடி தொகுதி தேமுதிக வேட்பாளரும் மாற்றப்பட்டுள்ளார். பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த கு.சந்திரபிராகாஷ் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் செல்வி நியமிக்கப்பட்டுள்ளார்.
மாற்றப்பட்டுள்ள புதிய வேட்பாளர்களுக்கு தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும், அமமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் மற்றும் கூட்டணிக் கட்சியைச் சார்ந்த நிர்வாகிகளும் ஒத்துழைப்பு அளித்து, தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபட்டு பொதுமக்களின் பேராதரவைத் திரட்ட வேண்டும் என்று, விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.





