“சாக்கடை” நாறுதுனு புகார் சொன்னா… “சரக்கு” நாற்றத்துடன் வந்து எகத்தாளம் செய்த “மேஸ்திரி அம்மணி”!! திருப்பூரில் காலையிலேயே நடந்த கூத்து!!
திருப்பூரில் மழை நீர் தேங்கி சாக்கடையெல்லாம் துர்நாற்றம் வீசுவதாக குடியிருப்புவாசிகள் மாநகராட்சிக்கு புகார் தெரிவிக்க, ஆண் தூய்மைப்பணியாளர் ஒருவருடன் வந்த மேஸ்திரி அம்மணி, காலையிலேயே புல் மப்பில் எகத்தாளம் செய்த சம்பவம் அனைவரையும் முகம் சுளிக்கச் செய்து விட்டது.
யார்டா புகார் சொன்னது..? எந்த அதிகாரியிடம் சொன்னாலும் எங்கள ஒண்ணும் செய்ய முடியாது என நாற வாயால் அவர் போட்ட ஆட்டத்தை செய்தியாளர் ஒருவர் படம் பிடிக்க, உஷாராக அவர் தள்ளாட்டத்துடன் ஓட்டம் பிடித்த காட்சியும் அரங்கேறியது.
தூர்நாற்றம்
திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலமான 15 வேலம்பாளையம் பகுதிக்கு உட்பட்ட 25-வது வார்டில் உள்ள கீதா நகர் பகுதியில் இன்று காலையில் தான் இந்த சம்பவம் அரங்கேறியது. திருப்பூர் பகுதியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி கனமழை பெய்து வருகிறது. இதனால் கீதா நகர் 1வது தெரு , 2-வது தெருக்களில் மழை நீர் சாக்கடை கால்வாயில் அதிகமாக தேங்கியது. சாக்கடை கால்வாய்கள் சரிவர தூர் வாரப்படாமல் இருந்ததாலும், மழை நீருடன் பிளாக்டிக் உள்ளிட்ட கழிவுகளும் சேர்ந்ததால் அந்தப் பகுதியில் தூர்நாற்றம் மூக்கைத் துளைத்தது. குடியிருப்புவாசிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
இதனால், அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் மாநகராட்சி சுகாதார அதிகாரி முருகனிடம் நேற்று புகார் தெரிவித்துள்ளார். அவரும் நாளைக்கு காலையில் ஆட்களை அனுப்பி சரி செய்வதாக கடமையுணர்வுடன் பதிலளித்துள்ளார். அதன்படி இன்று காலை மேஸ்திரி அம்மணி (பெயர் மருதம்மாள் ) யுடன் ஆண் தூய்மைப் பணியாளர் ஒருவரை அனுப்பி வைக்க, சம்பவ இடத்திற்கு வந்த மேஸ்திரி அம்மணி காட்டிய சீன் தான் பகீர் ரகம் ஆகி விட்டது.
ஆண் துய்மைப் பணியாளரை அவர் சாக்கடை சுத்தம் செய்ய கொண்டு வந்திருந்த உபகரணத்தை பிடித்தபடி நிற்கச் சொல்லி அப்படி நில்லுடா.. இப்படிப் பாருடா.. இப்படித் திரும்பி போஸ் கொடுடா என்று ஏகத்துக்கும் ஒருமையில் ஆண் என்றும் பாராமல் டா போட்டபடி தனது செல்போனில் படம் பிடித்தார் மேஸ்திரி அம்மணி. அதன் பின் எகத்தாளமாக அவர் காட்டிய கெத்து அப்பகுதிவாசிகளை அதிர்ச்சி அடையச் செய்து விட்டது.
சாக்கடையை விட “சரக்கு வாடை”
எவன்டா சாக்கடை நாறுதுனு அதிகாரியிடம் புகார் சொன்னது? எந்த அதிகாரியும் எங்களை ஒண்ணும் பண்ண முடியாது என ஏகவசனத்தில் அனைவரையும் வாய் கூச்சமின்றி வார்த்தைகளால் ஏகத்துக்கும் அர்ச்சனை செய்தார் மேஸ்திரி அம்மணி. அப்போதுதான் தெரிந்தது அவரது வாய் நல்ல வாய் இல்லை., நாற வாய் என்பது. காலை நேரத்திலேயே புல் மப்பில் இருந்த அவரது வாயில் இருந்து சாக்கடையை விட டாஸ்மாக் சரக்கு வாடை தூக்கி அடித்தது.
“போதை மேஸ்திரி எஸ்கேப்”
புல் சரக்கு போதையில் தள்ளாட்டம் போட்டபடி அந்த மேஸ்திரி அம்மணி நடத்திய அராஜகத்தை செய்தியாளர் ஒருவர் நைசாக படம் பிடிக்கத் தொடங்கினார். இதைக் கண்ட மேஸ்திரி அம்மணி உஷாரானார். போதை எங்கே போனது தெரியவில்லை? தன்னுடைய ஆட்டத்தை திடீரென நிறுத்திக் கொண்டு தள்ளாட்டத்துடன் அங்கிருந்து ஓட்டம் பிடிக்காத குறையாக எஸ்கேப் ஆக, இக் காட்சிகள் அனைத் தையும் அங்கிருந்த குடியிருப்புவாசிகள் கண்டு விக்கித்தனர்.
நடவடிக்கை உறுதி
இந்த அம்மணி மது போதையில் போட்ட ஆட்டம், மாநகராட்சி அதிகாரிகள் முதற்கொண்டு, புகார் செய்தவர்கள் மற்றும் ஆண் தூய்மையாளர் வரை அனைவரையும் ஒருமையில் ஏகத்துக்கும் திட்டியது குறித்து மாநகராட்சி மண்டல உதவி ஆணையரின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டது, அதற்கு அவர், சம்பந்தப்பட்ட மேஸ்திரி அம்மணி மீது உடனடியாக தக்க நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதமாக தெரிவித்தார்.
மக்களுக்கு பணி செய்யத்தான் மக்கள் வரிப்பணத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் தரப்படுகிறது. ஆனால் மேஸ்திரி அம்மணியான மருதம்மாள் போன்ற ஒரு சில அடாவடிகளால் ஒட்டுமொத்த ஊழியர்களுக்கே அவமானம் தான். அதுவும் காலை நேரத்தில் சரக்கு போதையில் ஆட்டம் போட்ட மருதம்மாள் மீது உரிய நடவடிக்கை பாய வேண்டியது மிக மிக அவசியமான ஒன்று.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





