கார்கே புகாருக்கு அவை துணைத் தலைவர் விளக்கம்!
மாநிலங்களவையில் மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படையினர் (CISF) வீரர்கள் எதிர்க்கட்சி எம்.பி.க்களை பேசவிடாமல் தடுப்பதாக அவையின் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே புகார் தெரிவித்திருந்தார்.
இதற்கு மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் கண்டனம் தெரிவித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது.
இதில், பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பிகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து, அமளியில் ஈடுபட்டுவருகின்றன.
இதில், ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் மட்டும் கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி மக்களவையிலும், 29ஆம் தேதி மாநிலங்களவையிலும் விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்பட்டது. எதிர்க்கட்சிகள் வைத்த மற்ற கோரிக்கைகள் ஏற்றுகொள்ளப்படாமல் உள்ளன. இதனால், தொடர்ந்து எதிர்க்கட்சியினர் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஆகஸ்ட் 1ஆம் தேதி நாடாளுமன்றம் கூடியபோது, மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சியினர் முழுக்கமிட முயன்றபோது, மாநிலங்களவையில், மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார்.
இது குறித்து அவர், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில், “எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் ஜனநாயக உரிமையான போராட்டத்தை பயன்படுத்தும்போது, மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படையினர் அவைக்குள் ஓடிவந்து தடுக்கும் விதம் எங்களுக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
இரண்டு நாளாக இது நடக்கிறது. நமது நாடாளுமன்றம் இவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதா? இதுமிகவும் ஆட்சேபனைக்குரியது. இதனை நாங்கள் கண்டிக்கின்றோம். எதிர்காலத்தில் உறுப்பினர்கள் பொதுமக்களின் முக்கியமான பிரச்சனைகளை எழுப்பும்போது, மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படையினர் அவைக்குள் வரமாட்டார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.
இதேபோல் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திமுக மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா, “நாடாளுமன்றத்தில் அசாதாரண சூழலை ஆளுங்கட்சியினர் வேண்டுமென்றே உருவாக்குகின்றனர். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு உரிமைகள் மறுக்கப்படுகின்றன. சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க கோரி குரல் எழுப்பி, அவையின் மையப்பகுதிக்கு செல்ல முற்பட்டோம்.
அப்போது மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படையினர் எம்.பி.க்களை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தினர். தீவிரவாத தாக்குதலை தடுக்க வந்ததை போன்ற அச்ச உணர்வை வீரர்கள் ஏற்படுத்தினர். இதுவரை இல்லாத வகையில் அவையில் பாதுகாப்புப் படை வீரர்கள் நடந்துகொள்கின்றனர்.
அவையில் துணை ராணுவ படையினர் நுழைந்தது ஏதோ ராணுவ நடவடிக்கை எடுப்பதுபோல் இருக்கிறது” எனத் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக திருச்சி சிவா எம்.பி.யும் மாநிலங்களவைத் துணைத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார். மாநிலங்களவை இன்று மீண்டும் கூடியபோது, “ஊடகங்களில் எம்.பி.க்கள் பேசியது தவறு. அவையின் மாண்பை அவமதிக்கும் வகையில் உறுப்பினர்களின் செயல்பாடு இருக்கிறது” என அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தெரிவித்தார்.
இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீவிரவாதிகள் கிடையாது. மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படையினரை இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி, அவை நடவடிக்கைகளில் எம்.பி.க்கள் பங்கேற்க முடியாதபடி செய்வது ஏற்றுகொள்ள முடியாதது” எனத் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், “அவையின் நடவடிக்கைகள் முடங்கியதைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி மத்தியப் பாதுகாப்புப் படைக்கு அனுமதி அளிக்கப்பட்டது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் துணைத் தலைவரின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து அவையில் அமளியில் ஈடுபட்டனர்.





