இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு… கடந்த 24 மணி நேரத்தில் 63,509 தொற்று… 630 பேர் உயிரிழப்பு..!
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. உயிரிழப்பும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
இந்தியாவில் ஜூலை மாதம் முதல் வேகமெடுக்கத் தொடங்கிய கொரோனா தொற்று பாதிப்பு 3 மாதங்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை உச்சத்துக்கு சென்று வந்தது. கடந்த மாதத்தில் தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தை தொட்ட நிலையில் உயிரிழப்பும் தினமும் ஆயிரத்தை கடந்தே பதிவாகி வந்தது. இதனால் உலக மொத்த பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்து 2-வது இடத்திலும், உயிரிழப்பில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து 3-வது இடத்திலும் இந்தியா உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் 3 மாதத்திற்கு பிறகு, கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து குறையத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 63,509 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 72.39 லட்சத்தை கடந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 74,632 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 63 லட்சத்தை கடந்துள்ளது. தற்போது 8.26 லட்சம் பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் உயிரிழப்பும் படிப்படியாக குறைந்தே வருகிறது. தினமும் ஆயிரத்திற்கு மேலாக உயிரிழப்புகள் இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 630 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரத்து 539 ஆக உள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 11,45,015 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 9 கோடியே 90 ஆயிரத்து 122 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என்றும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.







