--- --:--:-- --

ரூ.6.5 லட்சம் சொத்து வரி கட்ட மறுத்து வழக்கு : உயர் நீதிமன்றம் வைத்த “குட்டு” – வழக்கை வாபஸ் பெற்று யூ டர்ன் அடித்த “ரஜினி”!!

gfds

ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ரூ.6.5 லட்சம் சொத்து வரி கேட்டு சென்னை மாநகராட்சி, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதை எதிர்த்து ரஜினி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள், இவ்வளவு அவசரம் ஏன்? என எச்சரிக்கை விடுத்ததுடன், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக அபராதமும் விதிக்கப்போவதாக கூறியதால் ரஜினி வழக்கை வாபஸ் பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சொந்தமான பிரம்மாண்ட திருமண மண்டபம் சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இந்த திருமண மண்டபத்திற்கு கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலத்திற்கு சொத்து வரியாக ௹.6.5 லட்சம் வரி செலுத்தக் கோரி சென்னை மாநகராட்சி ரஜினிக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

 

ஆனால், ரஜினியோ கொரோனா ஊரடங்கு மற்றும் அரசு விதித்த தடை காரணமாக கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் ராகவேந்திரா மண்டபத்தில் திருமணமோ, வேறு நிகழ்ச்சிகளோ நடத்தப்படவில்லை. இதனால் சொத்து வரி எப்படி வசூலிக்கலாம்? எனக் கூறி ராகவேந்திரா மண்டபத்திற்கு சொத்து வரி செலுத்த பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

எச்சரிக்கை

 

இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பிய பத்து நாட்களுக்குள் வழக்கு தொடர்ந்தது ஏன்? என ரஜினி தரப்பிடம் கேள்வி எழுப்பினார். மேலும் நீதிமன்றத்தின் நேரத்தை நடிகர் ரஜினி தரப்பு வீணடிப்பதாக கூறி கண்டனம் தெரிவித்த நீதிபதி, அபராதம் விதிக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து வழக்கை வாபஸ் பெறுவதாக ரஜினி தரப்பு பின் வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த கொரோனா காலத்தில் ஆண்டி முதல் அரசன் வரை ஏதோ ஒரு வகையில் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால் பல தரப்பினரும் அரசின் சலுகையை எதிர்பார்த்துள்ளனர். தியேட்டர் அதிபர்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள், பெரிய மண்டபங்கள், மால்களின் உரிமையாளர்கள், பெரும் தொழிலதிபர்கள் என பலரும் அரசு தங்களுக்கு சலுகை தர வேண்டும் என கோரிக்கை மேல் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். இந்த சமயத்தில் தனது மண்டபத்திற்கு ரூ.6.5 லட்சம் வரி பாக்கி என நோட்டீஸ் அனுப்பப்பட்ட சில நாட்களிலேயே ரஜினி கோர்ட்டுக்கு சென்றதும், குட்டு வாங்கியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon