10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்று தொடக்கம்!
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்று தொடங்கும் நிலையில், மே 20ஆம் தேதி முடிவுகள் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இன்று தொடங்குகிறது. இது தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மையங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணிகளைத் தொய்வின்றி முடிக்க, தகுதியுள்ள அனைத்து ஆசிரியர்களையும் பணியில் ஈடுப்படுத்த வேண்டுமென கூறியுள்ளது. தமிழ் வழியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழ் வழி விடைத்தாள்களையும், ஆங்கில வழியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆங்கில வழி விடைத்தாள்களையும் மட்டுமே திருத்த அனுமதிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் விடைத்தாள் திருத்தப்பணிகள் முடிந்து, மே 20ஆம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





