இந்தியாவில் 4 மாநிலங்களில் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படவில்லை..!
கொரொனா வைரஸ் பாதிப்பால் இதுவரை மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை தாண்டியுள்ளது. நோய் தொற்றால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய காலத்தில் மருத்துவ பரிசோதனை வசதிகளோ, சிறப்பு மருத்துவமனைகளும் இல்லாத வடகிழக்கு மாநிலங்களில் கொரொனா பாதிப்பால் வெறும் 12 பேர் மட்டுமே உயிரிழந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களிலும் இதுவரை கொரோனாவால் உயிரிழப்புகள் பதிவாகவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரொனா பரவல் அதிகரித்ததை அடுத்து நான்கு மாநிலங்களில் 42 பரிசோதனைக் கூடங்களையும் கொரொனா சிகிச்சைக்காக 60 மருத்துவமனைகள், 360 சுகாதார மையங்கள், பராமரிப்பு மையங்களை ஏற்படுத்தி இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.







