சிங்கப்பூரிலும் கொரோனாவுக்கு 5 பேர் பலி..! ஒரு மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!!
சின்னஞ் சிறு நாடான சிங்கப்பூரிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து 5 பேர் பலியான நிலையில், அந்நாட்டில் வரும் 7-ந் தேதி முதல் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா மற்றும் உலக வர்த்தகத்தில் முன்னணி நாடாக திகழும் சிங்கப்பூரில், சீனர்களுக்கு அடுத்து அதிகமாக தமிழர்கள் வசித்து வருகின்றனர். இந்த நாட்டில் கடுமையான சட்ட திட்டங்களும், கட்டுப்பாடுகளும் மிக அதிகம். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சிங்கப்பூரிலும் இப்போது மெதுவாக பரவி பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பும் 5 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, சிங்கப்பூரில், வருகிற 7-ம் தேதி முதல், ஒரு மாத காலத்திற்கு, ஊடரங்கு அமல்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை இன்று மாலை அந்நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் லீ சியன் லூங் வெளியிட்டார்.
இதனால் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், சிறு, குறு, பெரு நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும் என்றார்.
உணவகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், மருத்துவமனைகள், போக்குவரத்து மற்றும் வங்கிகள், வழக்கம்போல் இயங்கும் என அவர் தெரிவித்துள்ளார். உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். பால், காய்கறி, மளிகை, இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள், அவற்றின் உற்பத்தி நிலையங்கள் மூடப்படாது என்றும் சிங்கப்பூர் பிரதமர் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




